0

கூடங்குளம்-ஒரு புரிதல்

Tuesday, March 27, 2012

உலகத்தின் எந்த நாட்டிலும் போராடும் மக்களுக்கு எதிரான அரச ஆதரவு போராட்டங்கள் என்பதான கருத்துக்களை கேள்விப்பட்டிருக்க முடியாது. அரச ஆதரவு சக்திகளுக்கு போராட வேண்டிய நிர்பந்தமும் தேவையும் என்ன? அரசின் கொள்கைகளில் மாறுபாடு கொண்டிருக்கும் மக்களுக்கு அவைகளை ஏற்றுக் கொள்வதற்கும் எதிர்த்து போராடுவதற்கும் இருக்கும் தர்க்க ரீதியான நியாயங்கள் தான் இயல்பான செயல்பாடுகள். எல்லா விதமான அடக்குமுறைகளையும் கையில் வைத்திருப்பவர்கள் "நாங்களும் போராடுகிறோம்" என்று கிளம்பியிருப்பது எவ்வளவு நகைப்பிற்குரிய செயல்.

நீண்ட நாட்களாக பேசாத குழந்தை வாயைத் திறந்து, அம்மா இந்த அப்பன் எப்ப சாவான் ? என்ற கதையாக மன்மோகன் தன் தவத்தைக் கலைத்திருக்கிறார். அவரது தவங்கள் மக்களுக்காகக் கலைவதில்லை என்பது வேறு விஷயம்.இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத அமெரிக்கா, NGO களின் மூலமாக கூடங்குளத்தை தடுக்க நினைப்பதாக திரைக்கதை எழுதுகிறார். ரஷிய அணு ஒப்பந்தம் அல்லவா, தோழர்களுக்கு தோள் கொடுத்து முதலாளித்துவ எதிர்ப்பைக் காட்டுவதுதானே நவீனதோழரின் நேர்மையான செயல்பாடாக இருக்க முடியும்?

மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு எப்படி பதில் சொல்கிறது என்பதைக் கொண்டு உண்மைகளை ஆராய்வது எளிது. காங்கிரசுக்கு எப்பொழுதும் புனித முகமூடிகள் தேவைப்படுகிறது. நிரந்தரத் தேவை காந்தி ,தற்போதைய தேவை "விஞ்ஞானி" அப்துல் கலாம். அப்துல் கலாமே சொல்லிட்டாரு,அணு உலை கண்டிப்பாகத் தேவை தான் என்ற எளிய பொதுக்கருத்தை உருவாக்க முனைந்தது ஒருபுறம். அது நாள் வரை எந்த ஒரு தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருந்த தினமலர், தான் வழக்கமாக ஈடுபடும் குலத்தொழில்களை செய்ய ஆரம்பித்தது இன்னொரு புறம். எல்லாத் துறைகளில் இருந்தும் அதிகார மையங்களுக்கு சமரசம் செய்துகொண்டு தங்களது நிலைகளை உறுதி செய்து கொள்பவர்கள் பெரும்பான்மையானவர்கள்.மக்களுக்குத் தீங்கு விளைவிக்ககூடிய செயல்பாடுகளை எதிர்த்து வெளியேறுபவர்கள் சொற்பமே.இதற்கு விஞ்ஞானிகளும் விதி விலக்குகள் அல்ல.

"இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானி" அப்துல் கலாம் என்ற பரப்புரைகளுடன் கூடிய அவரது அறிக்கைகள் அரச அதிகாரத்தின் குரல். அவரது துறை சார்ந்த அவரது சாதனைகளாக சொல்லப்பபட்டவைகளை முன்வைத்து கூடங்குளத்தை அணுகுவது முதிர்ச்சியான செயல்பாடாக இருக்க முடியாது. கலாம் எப்பொழுதும் அரசு அடக்குமுறைகளை எதிர்த்தவரில்லை. அப்படி எதிர்த்திருந்தால் "தலை சிறந்த விஞ்ஞானி"யாக வேறொருவர் இப்போது கூடங்குளத்தை ஆராய்ந்து அறிக்கைகளை அளித்துக் கொண்டிருந்திப்பார். போபால் விஷவாயு கசிந்து பலியான பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிவாரணம் என்ற பிச்சைக் காசைக் கொடுக்கும் கருணை கூட காங்கிரசுக்கு இதுவரை இருந்ததில்லை.அவர் விஞ்ஞானியாக இருப்பதாலேயே அணு உலை விஞ்ஞானம் பற்றிய கருத்து கூறலாம் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள், போபால் விஷவாயுவால் ஏற்பட்ட விபத்தை பற்றியும் அப்துல் கலாம் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.

தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறைக்கு,அணு உலையின் செயல்பாட்டை விடையாக காங்கிரஸ் நம் முன் வைக்கிறது. அவர்களது வாயிலிருந்தே, அணுஉலை மூலம் பெறப்படும் மின்சாரம் 600 மெகாவாட் தான் என்றும் தமிழகத்தின் தற்போதைய தேவையே 4000 மெகாவாட்டாக இருக்கிறது ,இந்த தேவை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்பது எளிய சூத்திரங்கள். அதற்கு மேல் நமது தலை சிறந்த முதல்வர்களின் இலவச திட்டங்களின் வாயிலாக அதிகரிக்கும் மின்தேவையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.யாருக்குத் தெரியும், அம்மா அடுத்த பொங்கலுக்கு ipad இலவசமாக கொடுத்து தமிழ் நாட்டை மாதிரி மாநிலமாகவும் மாற்றலாம் அல்லவா. இதில் உருவாக்கப்படும் 600 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாட்டிற்கே வரவேண்டும் என்ற ரஷிய ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் தமிழர்களுக்காகவே கையெழுத்திட்டு இருக்கிறார் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் மின்தேவைக்கும், எதிர்கால தேவைக்கும் சேர்த்து பல இடங்களில் பன்னாட்டு அணுஉலைகளை நிறுவி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து இந்தியாவை வல்லரசாக்குவார்கள் என்றும் நாம் நம்ப வேண்டும்.

அணு உலைகளால் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று ஒத்துக்கொள்ளும் அப்துல் கலாம் மற்றும் காங்கிரஸ் தியாகிகள், விமான விபத்துக்களும் ஏற்படத்தானே செய்கிறது அதற்காக வளர்ச்சியைத் தடை செய்வதா என்றொரு மிகவும் நகைப்புக்குரிய வாதத்தை வைக்கிறார்கள். அது போன்ற விபத்துக்களில்,தலைமுறைகளைத் தாண்டி அதன் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. தொலைக்காட்சிகளின் மூலம் குழந்தைகளுக்கு சீரழிவுகளை அனுமதிக்கும் பெற்றோர் தான் "கனவு காணுங்கள்" என்ற இந்த வியாபாரியின் உரையாடல்களையும் பள்ளிகளுக்குள் அனுமதிக்கிறார்கள். இன்றைக்கு போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட ஒரு தலைமுறை வளர்ந்து அடுத்த சந்ததிகளை எந்த பாதிப்பும் இல்லாமலே உருவாக்கி விட்டார்களா என்பதை கண்கூடாக காண இயலும். திருப்பூர் சாயக்கழிவுகளை விதிமுறைகளுக்கு புறம்பாக விவசாய நிலங்களில் பல்லாயிரம் அடி ஆழ்துளைக் குழாய்களின் மூலம் பூமிக்குள்ளே இறக்குவதை கண்டுகொள்ளாமல் குட்டி ஜப்பான் என்று பிதற்றும் வெற்று அரசியல் தானா நம் நிலைப்பாடு?அணுக்கழிவுகள் பற்றிப் பேசாமல், குட்டி ரஷியா என்று கூடங்குளத்தையும் பறைசாற்றி பெருமைப்பட்டுக்கொள்வதா என்பதையும் நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.