0

கொச்சை - ஒற்றைச்சிறகு

Saturday, February 12, 2011

கொச்சை என்பது தான் அந்தக் கிழவியின் பெயர். அவளே அவளுக்கு வைத்துக் கொண்ட பெயரா?அவளை அழைத்தவர்கள் வைத்ததா? என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். சின்ன கிராமங்களில் சில நாட்கள் தங்குவதும், சலித்துவிட்டால் வேறொரு இடம் நோக்கித் தன் பயணத்தைத் துவக்குவதும் தான் அவள் முழு நேரத் தொழில். அப்படி சுற்றித் திரிந்தவள் அந்த ஊரில் நிலை கொண்டு விட்டாள். ஏன் என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை, ஒரு வேளை, அவளுக்குத்  தெரிந்திருக்குமோ என்னவோ. தடி ஊன்றி  நடந்து நடந்து முட்டி தேய்ந்தது போல,வாழ்க்கை மீதான  நம்பிக்கையும் தேய்ந்து போய், வந்தடைந்த இடம் தான் அந்த  இடமா?

இப்பொழுது அந்த ஊரில் அவளும் ஒருத்தியே .ஊருக்குள்ளிருக்கும் கோவில் வாசல் தான் அவள் வசிப்பிடம் .என்னதான் பெண்கள் அவளைத் தூற்றினாலும், அவளுக்கான உணவை அவர்கள் எடுத்து வைக்கத் தவறுவதில்லை. அப்படித் தவறும் நேரத்தில் அவளே நேரடியாகச் சென்று வீட்டு முற்றத்தில் அமர்ந்து கொள்வது வழக்கம்.  அது மட்டுமல்ல, அவளது எரிச்சலூட்டும் வசைகளையும் கேட்க வேண்டி   இருக்கும். அவளை அருவெறுப்புடன் பார்த்தே பழக்கப் பட்டவர்கள் அவள் வருவதை ஒரு நாளும் விரும்பியதில்லை. அவளுக்கான பொழுதுகள் யாரையாவது வசைபாடிக் கொண்டே தான் புலரும்.சில நேரம்  நேரடியாக சில நேரங்களில் மறைமுகமாக. அவள்  யாரைத் திட்டுகிறாள் என்று கூர்ந்து கவனிக்கும் காதுகள், அது தான் இல்லை என்பதை உணர்ந்ததும்  நிம்மதி அடையும் . ஆனால் அது நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. அவள் வசைகளை சேமித்து வைத்து சமயம் கிடைக்கும் போது எதிராளியைத் தாக்குவதற்குப் பெண்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இதில் வருத்தப்படும் பெண்கள் அவளை எதுவும் கேட்க முடியாது. கேட்டாலும் பதிலாக வேறொரு புதிய வசை தான் பதிலாய் கிடைக்கும்.

இப்படி அவளுக்கென்று எந்தப் பெரிய பிரச்சினைகள் இல்லாமல் அவள் காலம் நன்றாய்த் தான் கடந்து கொண்டிருந்தது. அவ்வப்பொழுது அவளைத் தூங்கவிடாமல் சிறுவர்கள் தான் தொல்லை கொடுப்பார்கள். அந்த நேரங்களில் அவளது கம்பை  வைத்து மிரட்டவும் அடிக்கவும் செய்வாள். அவள் தடியை ஓங்குவதும் அதில்  இருந்து தப்பிப்பதும் சிறுவர்களுக்கான பொழுது போக்குகள். அந்த சமயங்களில், அவள் எழுந்து சிறிது தொலைவு சென்று வருவாள். அவளது உடமைகள் யாரும் எடுப்பதோ தொடுவதோ கூட கிடையாது. நாளடைவில் அவள் பெயரைக் கேட்டதும் எல்லோருக்கும் ஒரு அசூயை தொற்றிக் கொள்வதென்பது பொதுவானது.   சீல் பிடித்த கால்களைக் கொண்ட அவளுக்கு கொச்சை என்ற வார்த்தை மிகப் பொருத்தமானதாக அமைந்து போனது, நாளடைவில் யாரையாவது திட்டுபவர்கள் கூட அவளை இணைத்து திட்டித் தங்களை உள்ளூர மகிழ்வித்துக் கொள்வார்கள். இதன் மூலம் அவளை வைத்துப் பல புதிய கதைகள் உலவியதும் உண்டு. அவள் பல வருடங்களாக இங்கே தங்கி இருப்பதாகவும், தன் மத்திய வயதில், யாரோ ஒருவனுடைய உடல்பசி தீர்க்க இவளை உபயோகப் படுத்திக் கொண்டதாகவும், அதன் மூலம் இவளுக்கொரு வயது வந்த மகள் இருப்பதாகவும் கூட ஒரு கதை உண்டு.

அந்த ஊருக்கான ஒற்றைக் கடை,  மேற்குப் புறத்தில் ஒரு நடை தூரத்தில் அமைந்திருக்கும். இவளுக்கான எந்தப் பொருளும் அங்கு விற்பனைக்கு இல்லை. சில சமயங்களில் இவளுக்குத் தேங்காய் பன் வேண்டும். அதுவும் கூட புதன்கிழமையோ  அல்லது சனிக்கிழமையோ தான் . அந்த நாட்களில் தான், வெளியூரிலிருந்து சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்து விற்பனைகாகக் கொடுத்து விட்டுச் செல்வார்கள். புதிதாகத் தயாரிக்கப்பட்ட தேங்காய் பன்  கூறு போடப்பட்டு விற்பனைக்காக வைக்கப் பட்டிருப்பது அவளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதை சாப்பிடுவதற்காக அவள் அந்தக் கடையை வலம் வருவதும், கடைக்காரன் இவளை அதட்டி விரட்டுவதும் வாடிக்கையான செயல்கள். இவளது அசூயை தாங்காமல், ஒரு நாள்  ஒரு கருணை மகாராஜா ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தார். அந்த நாணயம் அவளுக்கான தேங்காய் பண்ணைக் கொடுத்தது. அந்தக் கடைக்காரனும் எந்த  எதிர்க்கேள்வியும் கேட்கவில்லை. அந்தக் காசையும் கூட எல்லாருடைய காசையும் போட்டு வைத்த கல்லாவிலே தான் போட்டு வைத்தான்.

அவளது  வருகை அந்த ஒற்றைக்கடைப் பக்கம் செல்வது அதிகரித்திருந்தது. இப்பொழுது இவள் எல்லோரிடமிருந்தும்  நாணயங்களைக் கேட்டு பெற்றுக் கொள்கிறாள். ஒருரூபாயை விடக் குறைவான மதிப்புள்ள காசுகளை ஒன்று சேர்த்து அந்தக் கடையிலேயே கொடுத்து முழு ஒரு ரூபாய்  நாணயமாக மாற்றிக் கொண்டு விடுவாள். இப்பொழுது இவள் தேங்காய் பன் சாப்பிடும் செலவு போக மிக அதிகமான காசுகளை வைத்திருக்கிறாள். இருந்தாலும் காசு கேட்பதை இவள் நிறுத்தவில்லை. அந்தக் கடைக்காரனும் கூட இவளிடம்  எவ்வளவு தொகை இருக்கிறதென்று தெரிந்து கொள்ள விரும்பினான். ஆனால் இவள் அதைப் பற்றியெல்லாம் மூச்சு விடுவதாய் இல்லை.தேடிப்பிடித்து குப்பை மேட்டில் கிடந்த ஒரு கோணிப்பையை எடுத்துக்  கொண்டு வந்து அதன் மேலே படுத்து உறங்கிக் கொள்வது அவளுக்கு மிகுந்த பாதுகாப்பானதாக இருந்தது.

அவளது சீல் பிடித்த கால்களில் ஒன்று  ஒரு நாள் செயலிழந்து இவள் நடப்பதும் நின்று போனது. இப்பொழுது கோணிப்பை தான் இவளது நிரந்தர இருக்கை. சில நாட்களில் இவள் பேசுவதும் கூட குறைந்து விட்டது. யாரும் அருகில் வந்து அவளை தொடவும் இல்லை,  ஒரு இரவு நேரத்தில் அவளது உடல் எந்த வித சலனமும் இல்லாமல் மூச்சை நிறுத்திக் கொண்டது. ஊரில் இருப்பவர்கள் ஒன்று கூடி, இவளை சுத்தம் செய்து அடக்கம் செய்வதற்கு  சில மாதாரிகளை  நியமத்து விட்டார்கள். சந்தியில் நின்று மூலையில் கும்பிடு போட்டு ஒதுங்கி செல்பவர்கள் மாதாரிகள். அன்று கொச்சையின் உடலை அப்புறப்படுத்த ஊருக்குள்ளும் கோவில் வாசலுக்கும் அனுமதிக்கப்பட்டார்கள்.  மூக்கைப் பொத்திக் கொண்டு அவளது உடலை நகர்த்தி வைத்து விட்டு கோணிப்பையை உதறியவர்கள் மலைத்து நின்றனர். அந்தக் கோணிப்பை முழுவதும் பரவிக் கிடந்த ஒரு ரூபாய் நாணயங்கள், அந்த சிறிய கோவிலின் சுவரைத் தாண்டி  சிதறி  உருண்டோட முயன்று தோற்று மறுபடியும் ஒரு வட்டம் அடித்து ஓய்ந்து போனது.

எல்லோரும் இப்பொழுது கொச்சையின் அருகில் இருந்த நாணயங்களை ஒவ்வொன்றாகப் பொருக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாணயங்கள் அனைத்தும் சேர்த்து எண்ணி முடிக்கும் போது இரண்டாயிரத்து இருநூற்றுப் பதினைந்து ரூபாய் இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள். இன்றைய தேதியிலிருந்து பதினைந்து வருடம் முன்பு அது ஒரு மிகப் பெரிய தொகை. அவளுக்கான இறுதி ஊர்வலம் அடுத்த நாள் மாலை மிக விமர்சையாக நடந்தேறியது. பட்டாசுகளும் மேல தாளமும் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைத்து எடுத்துச் சென்று எரித்தார்கள். பிணம் எரிப்பவர்கள் கையில் கனமான தடி வைத்திருப்பது வழக்கம். நரம்புகள் புடைத்து எரியும் பிணங்கள் எழுந்து வருவது போல தெரியும்போது ஓங்கி அடித்து அடித்து அமைதி பெறச் செய்வார்கள். முழு நிலவொளியில்,அன்றைய தினம் எரிக்கப்பட்ட   கொச்சையின் உடலில் எந்தவிதமான  ஆர்ப்பாட்டங்களும் இல்லை. மிகுந்த அமைதிக்கு நடுவே, வைக்கப்பட்ட நெருப்பு பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது.