2

#tnfisherman : ட்விட்டர் கோரிக்கைகள் உணர்த்தும் உண்மைகள்

Saturday, January 29, 2011

ட்விட்டர் சமூகம் நொடிக்கு சராசரியாக மூன்று ட்விட்களைக் கொண்டு  தமிழக மீனவர்களின் படுகொலைகளைக் கண்டித்து, மிகுந்த உத்வேகத்துடன் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் ஒருங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஒன்று பட்டுக் குரல் கொடுத்தால் சமூக வலைதளங்களின் பயன்களை குறிப்பிட்டதொரு தொலைவிற்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற புதிய துவக்கத்தை தமிழ் இணையதள பயன்பாட்டாளர்கள் உணர்ந்திருப்பார்கள் .

http://www.savetnfisherman.org/

இந்த இணையதளக் கோரிக்கைகளினால் இந்திய தேசம், தமிழர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் என்றோ தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது இத்துடன் முடிந்து விடும் என்றோ நினைப்பது அறியாமையே! வேண்டுமானால் அடுத்த மரணத்தை சிறிது காலம் தள்ளிப் போடலாம். அதுவும் சிங்கள  ராணுவத்தின் கருணைக் கைகளில் தான் அடங்கி இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்திய  தேசம் என்ற  கட்டமைப்புக்குள் நின்று கொண்டு, அதிகார மையங்களைக் கேள்விக்குள்ளாக்க  வேண்டும் என்பது தான் சாத்தியமான "தற்போதைய" எதார்த்தம். 

ஆட்சியில் இருக்கும் ம
த்திய மாநில அரசியல்வாதிகளின் அறிக்கைகளில் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதனால் தான் இது போன்ற அசம்பாவிதங்கள் நடை பெறுவதாகவும், இனிமேல் மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்றும் செல்லமாக மிரட்டல் விடுப்பார்கள்.  இது ஒரு வடிகட்டிய பொய் என்பதையும் மீனவர்களுக்கான உரிமைகளையும்,  ஐ. நா. வின் பன்னாட்டுக் கடல் சட்டங்கள் (United Nations Convention on the Law of the Sea) தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஒரு நாட்டுக்கான கடல் எல்லை என்பது 12 கடல் மைல்கள் தான் என்றாலும் கடலோர நாடுகளின்  பொருளாதார எல்லை(EEZ) மற்றும் மீனவர்களின் உரிமைகள் (EFZ)  ஆகியவற்றை முன்வைத்து அவர்கள் 200 கடல் மைல் தொலைவு வரை சென்று வர அனுமதி இருக்கிறது. இதை இரு நாட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் நடைமுறைப்படுதலாம் என்பதும் தெளிவான ஒன்று.

http://www.un.org/Depts/los/convention_agreements/convention_overview_convention.htm


* Coastal States exercise sovereignty over their territorial sea which they have the right to establish its breadth up to a limit not to exceed 12 nautical miles; foreign vessels are allowed "innocent passage" through those waters;

"* Coastal States have sovereign rights in a 200-nautical mile exclusive economic zone (EEZ) with respect to natural resources and certain economic activities, and exercise jurisdiction over marine science research and environmental protection;"   

http://www.suite101.com/content/the-united-nations-law-of-the-sea-a329696

 

"The Law of the Sea established a 12-mile territorial sea for coastal nations, guaranteed passage of all ships through international straits, prohibited dumping of industrial waste on the continental shelf, and considered matters related to military passage, pollution, and mining.


It was in the UNLS that coastal countries were granted the right to extend their territory to 200 miles offshore to create the Exclusive Economic Zone (EEZ) or an Exclusive Fisheries Zone (EFZ). The EEZ grants rights to natural resources within the zone. Commercial and military craft from other nations are allowed to pass through the EEZ, both on the water and in the air. The primary purpose of the zone is to allow the respective nation to control its coastal fisheries industry or to ban detrimental distant-water fishing fleets "


ஐ. நா. சொல்லியிருக்கும் "sovereign rights "  எனப்படும் இறையாண்மை என்பது இந்திய ஆட்சியாளர்களுக்கு மட்டும் பொருள் வேறானதாக இருக்கிறது. இதில் மீனவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டியது அந்த குறிப்பிட்ட நாட்டின் இறையாண்மை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது மட்டுமின்றி 200  கடல் மைல் தொலைவுகள் வரை மீனவர்கள் செல்வதற்கு எந்த அன்னிய நாடும் தடை விதிக்க முடியாது என்பதே எளிமையான உண்மை.  


இதை மனதில் கொண்டால், மீனவர் படுகொலைகளைக் கண்டித்தல்  என்பது முழுக்க முழுக்க இறையாண்மைக்கு உட்பட்டதே ! இணையத் தமிழர்கள் தமக்கான எல்லைகளில் நின்று கொண்டு என்ன விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதில் முக்கியமாக ஆங்கில வழி தகவல் பரிமாற்றங்களையும், அதைக் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகளையும் கையாள வேண்டும். இந்து ராமையும் சோ வையும் எதிர்த்து எழுதுவது முக்கியம் என்றாலும்,  நம் கோரிக்கைகளுக்கான அதிகார எல்லைகள் அதனினும் பெரியது.


அதற்காக, இணையத்தில் ஆங்கில வழி தகவல் பரிமாற்றங்களும், கோரிக்கைகளையும் பதிவு செய்தல் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. இந்த நோக்கத்தை முன்வைத்து இணையத் தமிழர்கள் தங்களது கணிசமான பங்கீடுகளை வழங்க வேண்டும் என்பதும்  அதன் மூலம் களத்தில் நின்று இயங்கும் "உண்மையான" உணர்வாளர்களுக்குப் பெரிதும் துணை புரியும் என்பதும் ஆக்கப் பூர்வமான செயல்பாடுகள் தான் என்பது மிகுந்த புத்துணர்வைத் தருகிறது.

0

கொடியவர்களின் கூடாரம்

Sunday, January 16, 2011

பரப்பாக விற்பனை செய்யப்படும் இதழ்களிலோ அல்லது உரக்கக் கூச்சலிட்டு கூவி அழைக்கும் breaking news சமாச்சாரங்களிலோ ஈடுபாடு ஏற்படுத்திக் கொள்வதில்லை,அந்த பரபரப்புக்குப் பின் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள முயல்வதைத் தவிர. ஆனால் அன்றாட தேவைகள் நிறைந்த சாதாரண மனிதர்களின்  கொள்கைகள் சாகும் வரை  நிலைத்திருக்குமா என்ன? அதை தற்காலிகமாகத்  தள்ளி வைக்கத்தான் நீரா ராடியா  போன்றவர்கள் அணிவகுத்துக்  காத்திருக்கிறார்களே!

காரல்மார்க்சின் தத்துவங்கள் என்னால் எப்பொழுதும் விளங்கிக்கொள்ள முடிந்ததில்லை. அதற்கொரு முக்கிய காரணமாக, அவைகள் வெறும் கோட்பாட்டளவிலேயே  இந்தியக் காம்ரேடுகள் தேக்கி வைத்ததாகவும் இருக்கலாம் அல்லது ஆங்கிலத்திலும் தமிழிலும் நான் பார்த்த மொழிபெயர்ப்புகள் மிகக் கடுமையானதாகவும்  இருக்கலாம். ஆனால் இந்தத்   தரகு தங்கமணி Niira Radia  [corporate lobbyist என்பதற்கான தமிழாக்கம்]வின்  ஒவ்வொரு அலைபேசியிலும் உரையாடும் மனிதர்களும் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளும் அவரவருக்கான நிலைப்பாடுகளும்,  அடடா அற்புதம்.

முதலில் இந்தியத்  திருநாட்டின் பல்வேறு மொழி வேறுபாடுகளைக் கொண்ட அதிகார வர்க்க கும்பலை ஆங்கிலம் எளிதாக ஒருமைப்படுத்தி விடுகிறது. ஹிந்தி என்று வாதிடும் தமிழ் தேசிய வாதிகள் outlook india இணையதளத்தில் நீரா ராடியாவிடம் உரையாடும் பெருங்கோமான்களின் வார்த்தைகளைக் கேளுங்கள். காம்ரேடுகளின் பிரச்சாரத்தில்  பத்து வார்தைகளுக்கொருமுறை உச்சரிக்கப்படும் வர்க்க பேதம் என்ற சொல்லாடலை எப்படி புரிந்து கொள்வது? உதாரணமாக நானும் தயாளு அம்மாளும் தமிழர்கள். ஆனால் அவர் என்றைக்காவது என்னை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பாரா? ஆனால் தரகு தங்கமணியை விசாரிப்பார். அதற்கு தப்பு தப்பாக இந்தி பேசும் ஒரு தமிழ் அடிமையும் துணைக்கு உண்டு. சரி தயாளு அம்மாளுக்கு என்ன அக்கறை ? பெத்து வச்ச புள்ளைங்களுக்கு சொத்து  சும்மா வருமா? corporate  என்று  ஊடகங்களால்  அன்பாக அழைக்கப்படும் நாட்டின் மிகப்பெரும் வணிகத் திருடர்களுடன் ஒருங்கிணைந்து நாட்டிற்கான தொழில் வளர்ச்சியைத் தொடர வேண்டாமா? அதற்கான இடை நிலைத் தரகர் தான் நம் தங்கமணி நீரா ராடியா.சரி தயாளு அம்மாளின் ஆசை மிக எளிமையானது. தன் பிள்ளைகள் நம் காலத்திற்குப்  பிறகு நன்றாக வாழ வேண்டும் என்ற தாயின் அக்கறை மட்டுமே.அதனால் விட்டு விடுவோம் .

மே மாதத்தில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்,மந்திரி சபை அமைக்கத்  தொடங்கிய ஆடு புலியாட்டத்தில் , தங்கமணியுடன் தொடர்பு கொண்ட ஒவ்வொருவருக்கும்   இருந்த நிலைப்பாடுகள் ஒரு பாசப் போராட்டம்.உணர்ச்சிகள் குவியல்கள்! இதில் முதலாவதாக,தி.மு.க விற்கு ஐந்து காபினெட்மந்திரிப் பதவி கேட்கலாம் என்று எதோ ஒரு குடும்ப பொதுக்குழு முடிவெடுத்துவிட்டது. ஆனால் காங்கிரஸ் மத்தியில் எதிர்பார்த்ததை விட அதிக இடங்கள் நாடு முழுதும் வென்றதால் பப்பு வேகவில்லை. சரி அஞ்சு கேட்டு மூனுக்கு  முடிச்சுக்குவோம் என்ற ரீதியில் பேச்சு வார்த்தை துவங்கியிருக்கிறது. அந்த மூன்றும் குடும்பத்துக்குள் பெரும் குழப்பத்தை உண்டு செய்திருப்பது வியப்பொன்றும் இல்லை. தயாநிதி எப்படியும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது அழகிரியின் கணக்கு.அதனால் தான் அன்புள்ளம் கொண்ட ராஜாவிற்கு தொலை தொடர்பை பெரிய மனது பண்ணி ஒதுக்கி விட்டார்கள், அதில் அவர் தலித் ஆனதால் சாதி அரசியலும் செய்து கொள்ளலாம். T R  பாலுவை மன்மோகனுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் அவரைத் தவிர எந்தக்கழுத்தையும் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெறலாம் என்பதை காங்கிரஸ் கண்டிப்பாக சொல்லி விட்டது. 

இதில், அந்த இரண்டு சீட்டுக்காக நடந்த நாடகம் ஒவ்வொருவரின் நிலைப்பாடுகளை கனகச்சிதமாக புரிந்து கொள்ள முடிகிறது.ராஜா தனக்கான சாதக அம்சங்களை  நீரா ராடியா மூலம் மேலும் வலுப்படுத்துகிறார்,எப்படி? கனிமொழியின் மூலம் தந்தைக்கு நெருக்கடி தரவேண்டுமென்று கோருகிறார். ஏன்? தனக்கான முதலாளிக்கு தயாநிதி என்ற இன்னொரு முதலாளி  தேவை இல்லை ராஜா என்ற பழைய அடிமை தான் தேவை. அதை கனிமொழி மறுக்க, தங்கமணி ஆறுதல் சொல்லித் தேற்றுவது கல்நெஞ்சம் கொண்டோரையும் கண்ணீரை வரவழைக்கும்,கருணாநிதி எம்மாத்திரம்? சரி, அழகிரி எப்படி? மிகதெளிவான தமிழன் மனநிலை. எனக்கு ரெண்டு கண்ணு போனாலும் போகட்டும் எதிரிக்கு அரைக் கண்ணாவது போகணும். தயாநிதிக்கு காபினெட்'னா எனக்கும் காபினெட் தான். ஆனா எனக்கு இல்லன்னா அவனுக்கும் கண்டிப்பா இருக்க கூடாது.

சரி நம் ஒழுக்க சீலன் தயாநிதி என்ன செய்தார்? புரட்சியாளன் கலாநிதி வைத்திருக்கும் தமிழர்களின் சாபக்கேடு sunnetwork போதுமே, செய்தி என்ற பெயரில் புரளி கிளப்பி விடுவது, காங்கிரஸ் மட்டத்தில் இவரே பெரிய தி மு க தூணாக சித்தரிப்பது, அழகிரி பற்றி படிக்காதவன் ரவுடி என்று புழுகுவது [உண்மையாகவும் இருக்கலாம்]. இது போன்ற  பல முனைத் தாக்குதல்களினால்  காங்கிரஸ் குழம்பி விட்டது. கலைஞரும் வயது முதிர்ந்து விட்டதாலும் கட்டுக்கோப்பான ஒருவரை காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யாததும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கி விட்டது. அதன் பிறகு ஒரு வழியாக கலைஞர் பரிவாரங்களுடன் டெல்லி சென்றதெல்லாம் இந்தியத் தொலைக்காட்சிகளில் அரங்கேறியது. 

இது வெறும் முதல் காட்சி மட்டுமே,தங்களுக்குத் தேவையான ஆட்சி அமைந்தவுடன் மிக வேகமாக தொழில் நடக்கிறது. நமது corporate'கள் தனக்கான தரகர்களைக் கொண்டு அடிமைகளை ஒன்றினைக்கிறார்கள். அவர்களில் முதன்மையான அடிமை ஆட்சியாளன் அல்லது மந்திரி.  பல தங்கமணிகள் தங்களது client [வணிகத் திருடர்கள்] களின் குடுமிப்பிடி சண்டையால் ஆட்சி செய்யும் அப்பாவி ராஜாவை நிர்பந்திகின்றனர். அதில் பெரிய திருடன் அம்பானிக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டதால் மற்றவர்களின் பொல்லாப்புக்கு ஆளாகி,பதவியை வேறொரு அடிமையிடம் இழந்து கோர்ட் படியேற வேண்டியதாகி விட்டது.spectrum அலைகற்றை ஊழலின் சாராம்சம் இது தான்.அதை பற்றிய தொழில்நுட்பத் தகவல்களை அதன் மூலம் இழந்த வருவாய் போன்றவற்றை எல்லாம்  விட்டு விடுவோம்.

சரி, இந்த நீரா வின் client Mr.Ratan Tata என்ற இன்னொரு முதலாளி பெரும் சோகத்தில் மூழ்கி விட்டார்.என்னடா இந்த ராஜாப்பையன் எல்லா சரக்கையும் அம்பானி brothers'கே விக்கிறானே  நமக்கு ஒன்னும் இல்லையான்னு இந்த அம்மா கிட்டேகேட்க இவங்க பாட்டுக்கு எடுத்த சபதம் முடிப்பேன்னு தன்னுடைய கூந்தலை முடிந்து கட்டிக்கொண்டு தான் வைத்திருக்கும் அடிமைகளுக்கு கட்டளை இடுகிறார். அவர்கள் தான் ஆங்கிலம் படித்த அறிவாளிகள். ஆங்கிலம் படித்தாலே அறிவாளி தானே,இதில் மாற்றுக் கருத்து உண்டா?

சமயம் பார்த்து அம்பானி குடும்ப சண்டை கோர்டுக்கு வர,எதோ ஒரு தயிர் சாதம் சாபிடற ஜட்ஜ் இது உங்க குடும்ப சண்டைன்னு சொல்லி இத நீங்க தான் தீர்துக்கணும்னு தப்பா தீர்ப்பு சொல்லிட்டாரு.நம்ம தங்கமணிக்கு கிடைச்சது பாயிண்ட். அம்பானி பசங்க சண்டை போடறது இயற்கை எரிவாயு ஆச்சே.அது நாட்டோட சொத்து இல்லையா,இவனுங்க எப்படி சண்ட போடலாம்னு  ஒரு கேள்வி. உடனே ஆங்கிலம் படித்த மண்டை வீங்கி  செய்தியாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து நாட்டு நிலைமையை  உணர வைக்கிறார். எப்படி? மதுகோடா,எடியூரப்பா அப்புறம் இந்த ஜட்ஜ் எல்லாம் தனி மனிதர்கள்.இவர்கள் எப்படி நாட்டின் இயற்கையை தனிமனிதருக்கு கூறு போடலாம். இது தொடர்பான கொள்கைகளை  பிரதமரே முன்  நின்று மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கல்லவா கொடுக்க வேண்டும்? இந்த செய்தியை  தான் தொடர்பில் இருக்கும் பத்திரிக்கையாளர்களை  ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு செய்திகள் தயாரிப்பதற்கான உத்தரவுகளை அள்ளி வழங்குகிறார். பிறகென்ன,ஆங்கிலம் படித்த செக்கு மாட்டு செய்தியாளர்கள் மறு நாளில் உயிர்தெழுந்த  ஏசுநாதரைப் போல் நாட்டுப்பற்று கீதத்தை பாடி முடித்திருப்பார்கள்.

இந்த நீரா ராடியாகளின் முழு முதற்கடமையும் செய்தியாளர்களின் தொடர்பு தான். இவர்கள் எந்த செய்தி எவ்வளவு நாட்கள் யாருக்கான ஆதரவுடன் வரவேண்டும் என்பதை தெளிவான திரைக்கதை எழுதித் தீர்மானிக்கிறார்கள். அத்தனை ஊடகங்களும்  அதனை ஒன்று போலவே கோரஸ்  பாடிவிட்டு பத்திரிகை தர்மம் பேசுகிறார்கள்.பல உதாரணகள் இருந்தாலும் மும்பை தாஜ் ஹோட்டல் குண்டு வெடிப்பும் ,ரயில் நிலையத்தில் காக்கை போலச் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களும் ஊடகங்களில் எவ்வாறாக தொகுக்கப்பட்டன  என்பதையும் ஊகிக்கலாம் அல்லவா? இங்கு தான் பர்கா தத் போன்ற ஆங்கிலம் பேசும் மேல்வர்க்க அடிமைகள்   ரயில் நிலையத்தில் கொன்று வீசப்பட்ட மனதர்களின் சடலங்களின் மீதேறிக்கொண்டு தங்கள் முகப்பூச்சுக்கள் கலையாமல் இந்தியாவின் அடையாளச் சின்னம் தாஜ் என்று உருகி ஏங்குகிறார்கள். 

இந்த spectrum ஊழலில் மதிப்பிடப்பட்ட தொகையைக் கண்டு, இந்தியன் என்று பெருமை கொண்டு திரியும் பொதுமக்கள் வழக்கம் போல் அரசியல் வாதியைத் திட்டிவிட்டு ஓய்ந்து விடுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளும்  தங்கமணிகளும்  பர்கா தத்களும் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமிக்க சேவகர்களே. இந்த புரிதலைக் கொண்டு  இந்த வணிகத் திருடர்களை இந்தியர்கள் ஆடையாளம் கண்டு கொள்ள நீரா ராடியாவின் ஒவ்வொரு உரையாடலையும் பொறுமையுடன் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நமக்கான  எதிர்ப்பரசியலை யார் மீது வைக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவலாம்.   

0

கிரிக்கெட் மட்டையும் உதய சூரியன் சின்னமும்

Monday, January 3, 2011

எனக்குப்பிடிக்காத பாடல்கள் என்னை விடாமல் துரத்தியடித்த துயரக்கதைகளை  நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறேன்.  பள்ளிப்பருவத்து அரசியல் பங்கெடுப்புகளில் [?] உள்ளூர் அரசியல் வாதிகள் வாங்கித்தரும் கிரிக்கெட் மட்டைகளுக்காக, கட்சி சின்னங்களை தெருவெங்கும் உள்ள சுவர்களில் வரைந்து என்  கலைத்தாகத்தை தீர்த்துக் கொண்டதும்  தவிர்க்க முடியாத வரலாற்று நினைவுகள். இவை இரண்டுக்கும் என்ன தொடர்பு? இவைகளில் இருந்து நான் மீண்டு புதுப்பிறவி எடுத்துவிட்டேனா? ஒரு சுய அலசல்.

ஜெயலலிதாவிற்கு அல்லது எம்.ஜி.ஆர் கட்சிக்கு ஒட்டு போடக் கூடாது என்பது என் பெற்றோர்களின் சமரசமில்லாத கொள்கை.அதற்காக அவர்கள் தி.மு.க  வை ஆதரித்ததை,  சிவாஜி என்ற நடிகரின் மீதான ரசிக மனப்பான்மை என்பதோடு தொடர்பு படுத்தி பின்னாளில்  புரிந்து கொண்டேன். அது சரி தவறு என்பது தனிக்கதை. அவர்களின் மூலம் தி.மு.க பற்று என்பது எனக்கு தெரியாமலே எனக்குள்  இருந்ததையும், என்னதான் அரசியல் வாதிகள் பணம் கொடுத்தாலும் உதயசூரியன் சின்னம் மட்டுமே  நான் வரைந்து கொள்கைக் குன்றாக விளங்கியதும் அதன் மூலம் வரும் கிரிக்கெட் மட்டைகள் மட்டுமே உன்னதமானவை என்பதும் என் அசைக்க முடியாத நம்பிக்கைகள்.

தமிழ் மாநில காங்கிரஸ் என்றொரு கட்சியும் அதன் மூலம் ரஜினி  என்ற மாபெரும் நடிகரும் தி.மு.க வுக்கு ஆதரவாக அறிக்கைகள் விட்டதும் அவைகள் சன் தொலைக்காட்சியில் அரை மணிக்கொருமுறை ஒளிபரப்பப்பட்டதும் மிகப்பரவசமூட்டும் நிகழ்வுகள். மின்னணு  எந்திரங்கள் இல்லாத காலம், வாக்கு  எண்ணிக்கை தொடங்கி  முடிவடையும் மூன்று நாட்களும் வெற்றி பெறப்போகும் தரப்புக்கு விழாக்கொண்டாடங்கள்  தான். தெருவில் தி.மு.க கட்சியினர் தொலைக்காட்சியை வைத்து தேர்தல்  அறிவிப்புகளைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடினர்.செய்திகள் முடிந்து ரஜினியின் பாடல்கள் ஒலிக்கும்போது எங்கள் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும்.ஒருவன் ஒருவன் முதலாளி, பொதுவாக எம் மனசு தங்கம் போன்ற பாடல்கள் நள்ளிரவு தாண்டியும் ஒளிபரப்பப்பட்டு எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

இவைகள் தற்செயலான அரசியல் நிகழ்வு தானென்றாலும் இன்று நடைபெற்றுக்  கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்களின் அடிப்படையான காரணிகள். தமிழ் மாநில  காங்கிரஸ் இன்று இல்லை. சன் குழுமம் தி.மு.க குடும்பம் "அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானும் டா" வகையறா. கருணாநிதியின் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் யாருக்கு எவ்வளவு  என்பதில்  தான் பிரச்சினையே தவிர, வேறு யாரையும் இந்த அரசியல் மற்றும் ஊடக வியாபாரத்தில் அனுமதிக்க கூடாது என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. இன்று சன் குழுமம் இருபத்தொரு தொலைக்காட்சிகளை தென்னகத்தில் கடை விரித்திருக்கிறது. சிலிகுரி முதல் சின்னஞ்சிறிய கிராமங்கள் வரை பண்பலை வானொலி சேவை[!] செய்கிறார்கள்.  ஷாம்புக்கள் இலவசமாய் கிடைக்கும் வாரப்பத்திரிகை முதல் தினந்தோறும் கொள்கை முழக்கங்களைத் தாங்கி  வரும் நாளேடுகளும் உண்டு. சன் பிச்சர்ஸ் மக்களுக்கு தொண்டு செய்யும் கலைப்படைப்புகளை மட்டும் வாங்கி திரையிடும் அரிய பணியை  அயராது செய்து வருகிறது.

தமிழர்களின் உயிர்நாடி சினிமாதான் என்பது குழந்தைகளை "excuse  me மிஸ்டர் கந்தசாமி" போன்ற பாடல்களுக்கு  நடனமாட வைத்து இன்புறும் பெற்றோர்களைக் கொண்டே அளவிட்டு விடலாம். இந்த சினிமாவில் ஷ்ஷங்கர் மற்றும் ரஜினியின் இடம் யாரும் விளக்க வேண்டியதில்லை. ரஜினியின் திரைப்படங்கள் திரையிடப்படும் அரங்குகள் ரசிகர்களால் நிகழ்த்தப்படும் கொண்டாட்டங்கள் நமக்கு மிகப்பரிச்சயமான ஒன்றே.எந்திரன் சன் குழுமத்தின் விளம்பரத்தால் தமிழகம் மட்டுமல்லாது  பல இடங்களில் மிகப்பெரிய கவனத்தை  ஈர்த்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள  புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும்,தாயகத்து தமிழர்களும் தங்களது அடையாளத்தை ரஜினி திரைப்படத்தின் முதல் காட்சியில் விசிலடித்து மீட்டுக்கொள்கிறார்கள்.தங்கள் ஆதர்சங்களின் மீது அபிமானம் கொள்வதில் தவறொன்றும் இருக்க முடியாது.

ரஜினி ரசிகர்கள்  முட்டாள்கள்   என்ற  வாதத்தை வைக்கும் அறிவு ஜீவிகள் தாங்கள் விரும்பும் படைப்புகளையும் அதே போன்றதொரு  மன நிலையில் தான் அணுகுகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் முற்றிலும் நிறுவன  மயமாகப்பட்ட சன் குழுமத்தின் வழியே நடைபெறும்போது   ரசிகர்களின் அன்பு என்பது திசை மாற்றப்பட்டு விடுகிறது. இவர்களின் வணிக விளம்பரங்கள் தவிர்கப்படவே முடியாத தமிழகத்தில் ஒவ்வொருவரும் நுகர்வாளனாக மாற வேண்டி கட்டாயப்படுத்துகிறார்கள். எந்திரன் தொலைக்காட்சியில் செய்தியாகவும் ,செய்தித்தாள்களில் சிறப்புக்கட்டுரையாகவும் உருவெடுப்பதை படிக்காமலோ பார்காமலோ எப்படி தவிர்ப்பது? மேலும், திரை அரங்கு உரிமையாளர்களை கையில் வைத்திருக்கும் இவர்கள், அரசாங்கத்திடம் இருந்து வரி சலுகையும் பெற்று விடுகிறார்கள். அதில் பட்டினி கிடக்கும் கலாநிதி மாறன்,AVM போன்ற வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் ஏழை தயாரிப்பாளர்களும் அடக்கம்.

பால் காவடி எடுப்பவர்கள் ,  80  அடி உயர கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும் ரஜினி ரசிகர்கள்  மூலம் இந்த நிறுவனம் பல வாடிக்கையாளர்களை பெருக்கிக்கொண்டு விடுகிறது. 70  கோடி ஏழைகளைக் கொண்ட இந்தியத் திருநாட்டில் எத்தனை குழந்தைகள் பட்டினியால் இறந்திருக்கிறார்கள் என்பதும்  அதில் ஒன்று உங்கள் தெருவிலும் இருக்கலாம்  என்பதையும் உணர்ந்தால் நம் சமூகத்தின் மீது நாமே நடத்திக் கொள்ளும் மிகப்பெரிய வன்முறைகளில் இதுவும் ஒன்றாக இடம் பெற்று விடும்.

வீடுகளுக்குள் திரைப்படங்களைக் கொண்டு வந்த  தொலைக்காட்சிகள் அரசியலை வெகு தொலைவிற்கு எடுத்து சென்று விட்டன. இப்பொழுதெல்லாம் நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு எனக்கான கிரிக்கெட் மட்டைகளை நானே வாங்கிக் கொள்வதால் உதய சூரியன் சின்னம் வரைவதற்கான கட்டாயம் ஏற்படவில்லை.  எனக்கு பிடிக்காத பாடல் என்று கட்டுரையின் ஆரம்பத்தில் கூறி இருந்தேன்.அதில் எனக்கொரு சுய ரசனை என்பது இருந்தது.அந்தப்பாடல் வெறுக்கப்படுவதற்கு எனக்கான நியாயங்கள்  இருந்தது.ஆனால் சுற்றி வளைத்து விழுங்கக் காத்திருக்கும் ஊடங்களுக்கு முன்னர் அவ்வாறான ஒரு சுயரசனை என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமா?