0

கிரிக்கெட் மட்டையும் உதய சூரியன் சின்னமும்

Monday, January 3, 2011

எனக்குப்பிடிக்காத பாடல்கள் என்னை விடாமல் துரத்தியடித்த துயரக்கதைகளை  நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறேன்.  பள்ளிப்பருவத்து அரசியல் பங்கெடுப்புகளில் [?] உள்ளூர் அரசியல் வாதிகள் வாங்கித்தரும் கிரிக்கெட் மட்டைகளுக்காக, கட்சி சின்னங்களை தெருவெங்கும் உள்ள சுவர்களில் வரைந்து என்  கலைத்தாகத்தை தீர்த்துக் கொண்டதும்  தவிர்க்க முடியாத வரலாற்று நினைவுகள். இவை இரண்டுக்கும் என்ன தொடர்பு? இவைகளில் இருந்து நான் மீண்டு புதுப்பிறவி எடுத்துவிட்டேனா? ஒரு சுய அலசல்.

ஜெயலலிதாவிற்கு அல்லது எம்.ஜி.ஆர் கட்சிக்கு ஒட்டு போடக் கூடாது என்பது என் பெற்றோர்களின் சமரசமில்லாத கொள்கை.அதற்காக அவர்கள் தி.மு.க  வை ஆதரித்ததை,  சிவாஜி என்ற நடிகரின் மீதான ரசிக மனப்பான்மை என்பதோடு தொடர்பு படுத்தி பின்னாளில்  புரிந்து கொண்டேன். அது சரி தவறு என்பது தனிக்கதை. அவர்களின் மூலம் தி.மு.க பற்று என்பது எனக்கு தெரியாமலே எனக்குள்  இருந்ததையும், என்னதான் அரசியல் வாதிகள் பணம் கொடுத்தாலும் உதயசூரியன் சின்னம் மட்டுமே  நான் வரைந்து கொள்கைக் குன்றாக விளங்கியதும் அதன் மூலம் வரும் கிரிக்கெட் மட்டைகள் மட்டுமே உன்னதமானவை என்பதும் என் அசைக்க முடியாத நம்பிக்கைகள்.

தமிழ் மாநில காங்கிரஸ் என்றொரு கட்சியும் அதன் மூலம் ரஜினி  என்ற மாபெரும் நடிகரும் தி.மு.க வுக்கு ஆதரவாக அறிக்கைகள் விட்டதும் அவைகள் சன் தொலைக்காட்சியில் அரை மணிக்கொருமுறை ஒளிபரப்பப்பட்டதும் மிகப்பரவசமூட்டும் நிகழ்வுகள். மின்னணு  எந்திரங்கள் இல்லாத காலம், வாக்கு  எண்ணிக்கை தொடங்கி  முடிவடையும் மூன்று நாட்களும் வெற்றி பெறப்போகும் தரப்புக்கு விழாக்கொண்டாடங்கள்  தான். தெருவில் தி.மு.க கட்சியினர் தொலைக்காட்சியை வைத்து தேர்தல்  அறிவிப்புகளைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடினர்.செய்திகள் முடிந்து ரஜினியின் பாடல்கள் ஒலிக்கும்போது எங்கள் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும்.ஒருவன் ஒருவன் முதலாளி, பொதுவாக எம் மனசு தங்கம் போன்ற பாடல்கள் நள்ளிரவு தாண்டியும் ஒளிபரப்பப்பட்டு எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

இவைகள் தற்செயலான அரசியல் நிகழ்வு தானென்றாலும் இன்று நடைபெற்றுக்  கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்களின் அடிப்படையான காரணிகள். தமிழ் மாநில  காங்கிரஸ் இன்று இல்லை. சன் குழுமம் தி.மு.க குடும்பம் "அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானும் டா" வகையறா. கருணாநிதியின் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் யாருக்கு எவ்வளவு  என்பதில்  தான் பிரச்சினையே தவிர, வேறு யாரையும் இந்த அரசியல் மற்றும் ஊடக வியாபாரத்தில் அனுமதிக்க கூடாது என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. இன்று சன் குழுமம் இருபத்தொரு தொலைக்காட்சிகளை தென்னகத்தில் கடை விரித்திருக்கிறது. சிலிகுரி முதல் சின்னஞ்சிறிய கிராமங்கள் வரை பண்பலை வானொலி சேவை[!] செய்கிறார்கள்.  ஷாம்புக்கள் இலவசமாய் கிடைக்கும் வாரப்பத்திரிகை முதல் தினந்தோறும் கொள்கை முழக்கங்களைத் தாங்கி  வரும் நாளேடுகளும் உண்டு. சன் பிச்சர்ஸ் மக்களுக்கு தொண்டு செய்யும் கலைப்படைப்புகளை மட்டும் வாங்கி திரையிடும் அரிய பணியை  அயராது செய்து வருகிறது.

தமிழர்களின் உயிர்நாடி சினிமாதான் என்பது குழந்தைகளை "excuse  me மிஸ்டர் கந்தசாமி" போன்ற பாடல்களுக்கு  நடனமாட வைத்து இன்புறும் பெற்றோர்களைக் கொண்டே அளவிட்டு விடலாம். இந்த சினிமாவில் ஷ்ஷங்கர் மற்றும் ரஜினியின் இடம் யாரும் விளக்க வேண்டியதில்லை. ரஜினியின் திரைப்படங்கள் திரையிடப்படும் அரங்குகள் ரசிகர்களால் நிகழ்த்தப்படும் கொண்டாட்டங்கள் நமக்கு மிகப்பரிச்சயமான ஒன்றே.எந்திரன் சன் குழுமத்தின் விளம்பரத்தால் தமிழகம் மட்டுமல்லாது  பல இடங்களில் மிகப்பெரிய கவனத்தை  ஈர்த்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள  புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும்,தாயகத்து தமிழர்களும் தங்களது அடையாளத்தை ரஜினி திரைப்படத்தின் முதல் காட்சியில் விசிலடித்து மீட்டுக்கொள்கிறார்கள்.தங்கள் ஆதர்சங்களின் மீது அபிமானம் கொள்வதில் தவறொன்றும் இருக்க முடியாது.

ரஜினி ரசிகர்கள்  முட்டாள்கள்   என்ற  வாதத்தை வைக்கும் அறிவு ஜீவிகள் தாங்கள் விரும்பும் படைப்புகளையும் அதே போன்றதொரு  மன நிலையில் தான் அணுகுகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் முற்றிலும் நிறுவன  மயமாகப்பட்ட சன் குழுமத்தின் வழியே நடைபெறும்போது   ரசிகர்களின் அன்பு என்பது திசை மாற்றப்பட்டு விடுகிறது. இவர்களின் வணிக விளம்பரங்கள் தவிர்கப்படவே முடியாத தமிழகத்தில் ஒவ்வொருவரும் நுகர்வாளனாக மாற வேண்டி கட்டாயப்படுத்துகிறார்கள். எந்திரன் தொலைக்காட்சியில் செய்தியாகவும் ,செய்தித்தாள்களில் சிறப்புக்கட்டுரையாகவும் உருவெடுப்பதை படிக்காமலோ பார்காமலோ எப்படி தவிர்ப்பது? மேலும், திரை அரங்கு உரிமையாளர்களை கையில் வைத்திருக்கும் இவர்கள், அரசாங்கத்திடம் இருந்து வரி சலுகையும் பெற்று விடுகிறார்கள். அதில் பட்டினி கிடக்கும் கலாநிதி மாறன்,AVM போன்ற வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் ஏழை தயாரிப்பாளர்களும் அடக்கம்.

பால் காவடி எடுப்பவர்கள் ,  80  அடி உயர கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும் ரஜினி ரசிகர்கள்  மூலம் இந்த நிறுவனம் பல வாடிக்கையாளர்களை பெருக்கிக்கொண்டு விடுகிறது. 70  கோடி ஏழைகளைக் கொண்ட இந்தியத் திருநாட்டில் எத்தனை குழந்தைகள் பட்டினியால் இறந்திருக்கிறார்கள் என்பதும்  அதில் ஒன்று உங்கள் தெருவிலும் இருக்கலாம்  என்பதையும் உணர்ந்தால் நம் சமூகத்தின் மீது நாமே நடத்திக் கொள்ளும் மிகப்பெரிய வன்முறைகளில் இதுவும் ஒன்றாக இடம் பெற்று விடும்.

வீடுகளுக்குள் திரைப்படங்களைக் கொண்டு வந்த  தொலைக்காட்சிகள் அரசியலை வெகு தொலைவிற்கு எடுத்து சென்று விட்டன. இப்பொழுதெல்லாம் நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு எனக்கான கிரிக்கெட் மட்டைகளை நானே வாங்கிக் கொள்வதால் உதய சூரியன் சின்னம் வரைவதற்கான கட்டாயம் ஏற்படவில்லை.  எனக்கு பிடிக்காத பாடல் என்று கட்டுரையின் ஆரம்பத்தில் கூறி இருந்தேன்.அதில் எனக்கொரு சுய ரசனை என்பது இருந்தது.அந்தப்பாடல் வெறுக்கப்படுவதற்கு எனக்கான நியாயங்கள்  இருந்தது.ஆனால் சுற்றி வளைத்து விழுங்கக் காத்திருக்கும் ஊடங்களுக்கு முன்னர் அவ்வாறான ஒரு சுயரசனை என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமா?  

0 Responses to "கிரிக்கெட் மட்டையும் உதய சூரியன் சின்னமும்"