0

கொடியவர்களின் கூடாரம்

Sunday, January 16, 2011

பரப்பாக விற்பனை செய்யப்படும் இதழ்களிலோ அல்லது உரக்கக் கூச்சலிட்டு கூவி அழைக்கும் breaking news சமாச்சாரங்களிலோ ஈடுபாடு ஏற்படுத்திக் கொள்வதில்லை,அந்த பரபரப்புக்குப் பின் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள முயல்வதைத் தவிர. ஆனால் அன்றாட தேவைகள் நிறைந்த சாதாரண மனிதர்களின்  கொள்கைகள் சாகும் வரை  நிலைத்திருக்குமா என்ன? அதை தற்காலிகமாகத்  தள்ளி வைக்கத்தான் நீரா ராடியா  போன்றவர்கள் அணிவகுத்துக்  காத்திருக்கிறார்களே!

காரல்மார்க்சின் தத்துவங்கள் என்னால் எப்பொழுதும் விளங்கிக்கொள்ள முடிந்ததில்லை. அதற்கொரு முக்கிய காரணமாக, அவைகள் வெறும் கோட்பாட்டளவிலேயே  இந்தியக் காம்ரேடுகள் தேக்கி வைத்ததாகவும் இருக்கலாம் அல்லது ஆங்கிலத்திலும் தமிழிலும் நான் பார்த்த மொழிபெயர்ப்புகள் மிகக் கடுமையானதாகவும்  இருக்கலாம். ஆனால் இந்தத்   தரகு தங்கமணி Niira Radia  [corporate lobbyist என்பதற்கான தமிழாக்கம்]வின்  ஒவ்வொரு அலைபேசியிலும் உரையாடும் மனிதர்களும் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளும் அவரவருக்கான நிலைப்பாடுகளும்,  அடடா அற்புதம்.

முதலில் இந்தியத்  திருநாட்டின் பல்வேறு மொழி வேறுபாடுகளைக் கொண்ட அதிகார வர்க்க கும்பலை ஆங்கிலம் எளிதாக ஒருமைப்படுத்தி விடுகிறது. ஹிந்தி என்று வாதிடும் தமிழ் தேசிய வாதிகள் outlook india இணையதளத்தில் நீரா ராடியாவிடம் உரையாடும் பெருங்கோமான்களின் வார்த்தைகளைக் கேளுங்கள். காம்ரேடுகளின் பிரச்சாரத்தில்  பத்து வார்தைகளுக்கொருமுறை உச்சரிக்கப்படும் வர்க்க பேதம் என்ற சொல்லாடலை எப்படி புரிந்து கொள்வது? உதாரணமாக நானும் தயாளு அம்மாளும் தமிழர்கள். ஆனால் அவர் என்றைக்காவது என்னை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பாரா? ஆனால் தரகு தங்கமணியை விசாரிப்பார். அதற்கு தப்பு தப்பாக இந்தி பேசும் ஒரு தமிழ் அடிமையும் துணைக்கு உண்டு. சரி தயாளு அம்மாளுக்கு என்ன அக்கறை ? பெத்து வச்ச புள்ளைங்களுக்கு சொத்து  சும்மா வருமா? corporate  என்று  ஊடகங்களால்  அன்பாக அழைக்கப்படும் நாட்டின் மிகப்பெரும் வணிகத் திருடர்களுடன் ஒருங்கிணைந்து நாட்டிற்கான தொழில் வளர்ச்சியைத் தொடர வேண்டாமா? அதற்கான இடை நிலைத் தரகர் தான் நம் தங்கமணி நீரா ராடியா.சரி தயாளு அம்மாளின் ஆசை மிக எளிமையானது. தன் பிள்ளைகள் நம் காலத்திற்குப்  பிறகு நன்றாக வாழ வேண்டும் என்ற தாயின் அக்கறை மட்டுமே.அதனால் விட்டு விடுவோம் .

மே மாதத்தில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்,மந்திரி சபை அமைக்கத்  தொடங்கிய ஆடு புலியாட்டத்தில் , தங்கமணியுடன் தொடர்பு கொண்ட ஒவ்வொருவருக்கும்   இருந்த நிலைப்பாடுகள் ஒரு பாசப் போராட்டம்.உணர்ச்சிகள் குவியல்கள்! இதில் முதலாவதாக,தி.மு.க விற்கு ஐந்து காபினெட்மந்திரிப் பதவி கேட்கலாம் என்று எதோ ஒரு குடும்ப பொதுக்குழு முடிவெடுத்துவிட்டது. ஆனால் காங்கிரஸ் மத்தியில் எதிர்பார்த்ததை விட அதிக இடங்கள் நாடு முழுதும் வென்றதால் பப்பு வேகவில்லை. சரி அஞ்சு கேட்டு மூனுக்கு  முடிச்சுக்குவோம் என்ற ரீதியில் பேச்சு வார்த்தை துவங்கியிருக்கிறது. அந்த மூன்றும் குடும்பத்துக்குள் பெரும் குழப்பத்தை உண்டு செய்திருப்பது வியப்பொன்றும் இல்லை. தயாநிதி எப்படியும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது அழகிரியின் கணக்கு.அதனால் தான் அன்புள்ளம் கொண்ட ராஜாவிற்கு தொலை தொடர்பை பெரிய மனது பண்ணி ஒதுக்கி விட்டார்கள், அதில் அவர் தலித் ஆனதால் சாதி அரசியலும் செய்து கொள்ளலாம். T R  பாலுவை மன்மோகனுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் அவரைத் தவிர எந்தக்கழுத்தையும் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெறலாம் என்பதை காங்கிரஸ் கண்டிப்பாக சொல்லி விட்டது. 

இதில், அந்த இரண்டு சீட்டுக்காக நடந்த நாடகம் ஒவ்வொருவரின் நிலைப்பாடுகளை கனகச்சிதமாக புரிந்து கொள்ள முடிகிறது.ராஜா தனக்கான சாதக அம்சங்களை  நீரா ராடியா மூலம் மேலும் வலுப்படுத்துகிறார்,எப்படி? கனிமொழியின் மூலம் தந்தைக்கு நெருக்கடி தரவேண்டுமென்று கோருகிறார். ஏன்? தனக்கான முதலாளிக்கு தயாநிதி என்ற இன்னொரு முதலாளி  தேவை இல்லை ராஜா என்ற பழைய அடிமை தான் தேவை. அதை கனிமொழி மறுக்க, தங்கமணி ஆறுதல் சொல்லித் தேற்றுவது கல்நெஞ்சம் கொண்டோரையும் கண்ணீரை வரவழைக்கும்,கருணாநிதி எம்மாத்திரம்? சரி, அழகிரி எப்படி? மிகதெளிவான தமிழன் மனநிலை. எனக்கு ரெண்டு கண்ணு போனாலும் போகட்டும் எதிரிக்கு அரைக் கண்ணாவது போகணும். தயாநிதிக்கு காபினெட்'னா எனக்கும் காபினெட் தான். ஆனா எனக்கு இல்லன்னா அவனுக்கும் கண்டிப்பா இருக்க கூடாது.

சரி நம் ஒழுக்க சீலன் தயாநிதி என்ன செய்தார்? புரட்சியாளன் கலாநிதி வைத்திருக்கும் தமிழர்களின் சாபக்கேடு sunnetwork போதுமே, செய்தி என்ற பெயரில் புரளி கிளப்பி விடுவது, காங்கிரஸ் மட்டத்தில் இவரே பெரிய தி மு க தூணாக சித்தரிப்பது, அழகிரி பற்றி படிக்காதவன் ரவுடி என்று புழுகுவது [உண்மையாகவும் இருக்கலாம்]. இது போன்ற  பல முனைத் தாக்குதல்களினால்  காங்கிரஸ் குழம்பி விட்டது. கலைஞரும் வயது முதிர்ந்து விட்டதாலும் கட்டுக்கோப்பான ஒருவரை காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யாததும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கி விட்டது. அதன் பிறகு ஒரு வழியாக கலைஞர் பரிவாரங்களுடன் டெல்லி சென்றதெல்லாம் இந்தியத் தொலைக்காட்சிகளில் அரங்கேறியது. 

இது வெறும் முதல் காட்சி மட்டுமே,தங்களுக்குத் தேவையான ஆட்சி அமைந்தவுடன் மிக வேகமாக தொழில் நடக்கிறது. நமது corporate'கள் தனக்கான தரகர்களைக் கொண்டு அடிமைகளை ஒன்றினைக்கிறார்கள். அவர்களில் முதன்மையான அடிமை ஆட்சியாளன் அல்லது மந்திரி.  பல தங்கமணிகள் தங்களது client [வணிகத் திருடர்கள்] களின் குடுமிப்பிடி சண்டையால் ஆட்சி செய்யும் அப்பாவி ராஜாவை நிர்பந்திகின்றனர். அதில் பெரிய திருடன் அம்பானிக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டதால் மற்றவர்களின் பொல்லாப்புக்கு ஆளாகி,பதவியை வேறொரு அடிமையிடம் இழந்து கோர்ட் படியேற வேண்டியதாகி விட்டது.spectrum அலைகற்றை ஊழலின் சாராம்சம் இது தான்.அதை பற்றிய தொழில்நுட்பத் தகவல்களை அதன் மூலம் இழந்த வருவாய் போன்றவற்றை எல்லாம்  விட்டு விடுவோம்.

சரி, இந்த நீரா வின் client Mr.Ratan Tata என்ற இன்னொரு முதலாளி பெரும் சோகத்தில் மூழ்கி விட்டார்.என்னடா இந்த ராஜாப்பையன் எல்லா சரக்கையும் அம்பானி brothers'கே விக்கிறானே  நமக்கு ஒன்னும் இல்லையான்னு இந்த அம்மா கிட்டேகேட்க இவங்க பாட்டுக்கு எடுத்த சபதம் முடிப்பேன்னு தன்னுடைய கூந்தலை முடிந்து கட்டிக்கொண்டு தான் வைத்திருக்கும் அடிமைகளுக்கு கட்டளை இடுகிறார். அவர்கள் தான் ஆங்கிலம் படித்த அறிவாளிகள். ஆங்கிலம் படித்தாலே அறிவாளி தானே,இதில் மாற்றுக் கருத்து உண்டா?

சமயம் பார்த்து அம்பானி குடும்ப சண்டை கோர்டுக்கு வர,எதோ ஒரு தயிர் சாதம் சாபிடற ஜட்ஜ் இது உங்க குடும்ப சண்டைன்னு சொல்லி இத நீங்க தான் தீர்துக்கணும்னு தப்பா தீர்ப்பு சொல்லிட்டாரு.நம்ம தங்கமணிக்கு கிடைச்சது பாயிண்ட். அம்பானி பசங்க சண்டை போடறது இயற்கை எரிவாயு ஆச்சே.அது நாட்டோட சொத்து இல்லையா,இவனுங்க எப்படி சண்ட போடலாம்னு  ஒரு கேள்வி. உடனே ஆங்கிலம் படித்த மண்டை வீங்கி  செய்தியாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து நாட்டு நிலைமையை  உணர வைக்கிறார். எப்படி? மதுகோடா,எடியூரப்பா அப்புறம் இந்த ஜட்ஜ் எல்லாம் தனி மனிதர்கள்.இவர்கள் எப்படி நாட்டின் இயற்கையை தனிமனிதருக்கு கூறு போடலாம். இது தொடர்பான கொள்கைகளை  பிரதமரே முன்  நின்று மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கல்லவா கொடுக்க வேண்டும்? இந்த செய்தியை  தான் தொடர்பில் இருக்கும் பத்திரிக்கையாளர்களை  ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு செய்திகள் தயாரிப்பதற்கான உத்தரவுகளை அள்ளி வழங்குகிறார். பிறகென்ன,ஆங்கிலம் படித்த செக்கு மாட்டு செய்தியாளர்கள் மறு நாளில் உயிர்தெழுந்த  ஏசுநாதரைப் போல் நாட்டுப்பற்று கீதத்தை பாடி முடித்திருப்பார்கள்.

இந்த நீரா ராடியாகளின் முழு முதற்கடமையும் செய்தியாளர்களின் தொடர்பு தான். இவர்கள் எந்த செய்தி எவ்வளவு நாட்கள் யாருக்கான ஆதரவுடன் வரவேண்டும் என்பதை தெளிவான திரைக்கதை எழுதித் தீர்மானிக்கிறார்கள். அத்தனை ஊடகங்களும்  அதனை ஒன்று போலவே கோரஸ்  பாடிவிட்டு பத்திரிகை தர்மம் பேசுகிறார்கள்.பல உதாரணகள் இருந்தாலும் மும்பை தாஜ் ஹோட்டல் குண்டு வெடிப்பும் ,ரயில் நிலையத்தில் காக்கை போலச் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களும் ஊடகங்களில் எவ்வாறாக தொகுக்கப்பட்டன  என்பதையும் ஊகிக்கலாம் அல்லவா? இங்கு தான் பர்கா தத் போன்ற ஆங்கிலம் பேசும் மேல்வர்க்க அடிமைகள்   ரயில் நிலையத்தில் கொன்று வீசப்பட்ட மனதர்களின் சடலங்களின் மீதேறிக்கொண்டு தங்கள் முகப்பூச்சுக்கள் கலையாமல் இந்தியாவின் அடையாளச் சின்னம் தாஜ் என்று உருகி ஏங்குகிறார்கள். 

இந்த spectrum ஊழலில் மதிப்பிடப்பட்ட தொகையைக் கண்டு, இந்தியன் என்று பெருமை கொண்டு திரியும் பொதுமக்கள் வழக்கம் போல் அரசியல் வாதியைத் திட்டிவிட்டு ஓய்ந்து விடுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளும்  தங்கமணிகளும்  பர்கா தத்களும் தங்களது எஜமானர்களுக்கு விசுவாசமிக்க சேவகர்களே. இந்த புரிதலைக் கொண்டு  இந்த வணிகத் திருடர்களை இந்தியர்கள் ஆடையாளம் கண்டு கொள்ள நீரா ராடியாவின் ஒவ்வொரு உரையாடலையும் பொறுமையுடன் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நமக்கான  எதிர்ப்பரசியலை யார் மீது வைக்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவலாம்.   

0 Responses to "கொடியவர்களின் கூடாரம்"