0

எழுத்தாளரும் இயக்குனரும்!

Monday, December 27, 2010

இயக்குனர் பாலாவின் நான் கடவுள் மற்றும் பிதாமகன் திரைப்படங்கள் அடுத்தடுத்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு திரைப்படங்களின் மூலம், எழுத்தாளனின் பங்கு ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது காணக் கிடைக்கிறது. பொதுவாக பாலாவின் பாத்திரங்கள் அவர்களுக்குண்டான நியதிகளுக்குட்பட்டு அழுது அரற்றுபவை. அது சரி தவறு என்னும் வாதத்திற்கு சென்று ஒரு படைப்பாளனுக்கு உத்தரவிடுவது என் வேலை அல்ல.அவருடைய எல்லா திரைப்படங்களிலும் இயலாமையை வெளிப்படுத்தும் கதாபாதிரங்களுக்கு இடையே ஒரு மெல்லிய நூல் இழையோடுவது தெரியும்.

இவ்வாறான பாத்திரங்கள் நான் கடவுள் திரைப்படத்தில் கதையின் மைய நோக்கத்திற்கு உட்பட்டு ஒரு தெளிவான கோர்வையான காட்சியமைப்புகளை முன்வைக்கிறது. ஆனால் பிதாமகன் பாத்திரங்களோ கிட்ட தட்ட அனேக முக்கியக் காட்சிகளிலும் எல்லை மீறுகிறது. சிறையில் சித்தன் மீது தாக்குதல் நடத்த ரௌடிகள் மீண்டும் சிறைக்குள் வரும் காட்சிகளும் அதை தொடர்ந்து சக்தி சித்தனை கட்டுப்படுத்த முயல்வதும் காவலர்கள் சக்தியை தவறாக தண்டிப்பதும் வலுவான காட்சியமைப்புகள் இல்லாமல் தொய்வு ஏற்படுத்துகிறது. ஆனால் இயக்குனரின் சக்தியின் மீதான் அனுதாபம் வழிய திணிக்கப்படுகிறது.இது சக்தி இறுதி காட்சியில் கொல்லப்பட்டு சாக்கு மூட்டைக்குள் பிணமான பிறகும் நடைபெறுகிறது. சக்தியின் கோரமான முகத்தைக் கண்ட பிறகு சித்தன் வானத்தை வெறித்துப் பார்பதிலேயே புரிந்து விடும். ஆனால் காட்சிகள் நீடிக்கப்பட்டு சக்தியின் உருவம் இரண்டுமுறை தோன்றி மறைவதும், பலர் சித்தன் மீதான தங்கள் வெறுப்புகளைக் கொட்டுவதும் படு செயற்கையானது.இது ஒன்று அழுத்தமான இசைக்கோர்வைகளைக் கொண்டு சரி செய்யப்படுகிறது அல்லது புஜ பலம் திரண்ட கதாநாயக பிம்பங்களின் எல்லையற்ற வன்முறைகளின் மூலம் பார்வையாளனை அதிர்ச்சிக்குள்ளாக்கி மறக்கடிக்கப் படுகிறது. 

மேலும் சக்தியின் மண்டையோட்டை பார்த்து சித்தன் கதறும் இடமே படம் நிறைவு பெற்று விடுகிறது. ஆனால் தமிழ் சினிமாவின் தார்மிக நியதி ,கொந்தளிப்பான பாடலினூடே பாலாவின் எல்லையையும் சுருக்கி வில்லன் பழிவாங்கப்பட்டு நிறைவடைகிறது. சித்தனின் கதறல் தான் இந்த படைப்பின் உண்மையான தாக்கமாக இருக்க முடியும். சித்தனின் எதிர்பார்ப்பு என்பது அன்பு ஒன்று தான். அது சங்கீதாவின் வீட்டுக்கு சித்தன் முதல் முறை வரும்போது கோழி தன் குஞ்சுகளுடன் இறை பொறுக்குவதும் அதற்கான பின்னணி இசை "யாரது யாரது " பாடலின் முன்னோட்டமாக இசைப்பதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம், 

ஒரு வெட்டியானாக அவனுக்கு சக்தியின் மண்டையோடு கொடுக்கும் கதறல் தான் சித்தனின் தூய்மையான அன்பு. அருமையான கதை மாந்தர்களை உருவாக்கத் தெரிந்த பாலா எழுத்தாளனாக அதே கதாபாத்திரங்களின் உணர்சிகளை தேவைகேற்ப கட்டுப்படுத்தவில்லை . சித்தனின் இறுதி காட்சிகளின் உறுமலும், வில்லனை கிடத்திவிட்டு தவிப்பதும், தேவையற்ற பல சண்டை காட்சிகளும் சித்தன் உள்வாங்கிக் கொண்ட எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான அன்பை பார்வையாளனுக்குள் செலுத்தவில்லை மாறாக திணிக்கப்பட்ட வன்முறைகளின் தாக்கமே எஞ்சி நிற்கிறது.

நான் கடவுளும் கூட புஜ பலம் திரண்ட கதாநாயகனின் வன்முறை இருக்கிறது. அந்த வன்முறை கதைகுட்பட்டு அழகாக கட்டுப்படுத்தப்படுகிறது. பிச்சை எடுக்கும் சிறுவர்கள் கட்டாயமாக பிரித்துக் கொண்டு செல்லும்போது அவர்களின் மீதான பார்வையாளனின் பரிதாபத்தை நேர்மையாக எடுத்துரைக்கிறது. அம்சவல்லி ருத்ரனிடம் உதவியைக் கோரும்போது நம்மையும் சேர்த்து மன்றாடக் கோருகிறது.

பாலா பிதாமகனில் ஒரு எழுத்தாளனின் வெற்றிடத்தை உணர்த்து கொண்டதாகத்தான் தோன்றுகிறது.நான் கடவுள் திரைப்படத்தின் ஆன்மிகம் வரம் மரணம் போன்றவை மீதான பல விமர்சங்களை முன்வைக்க முடியும் என்றாலும் ஒரு படைப்பாளியாக கதைக்கு உண்மையாக எழுத்தாளனின் பங்களிப்பையும் உறுதி செய்திருப்பது போற்றுதலுக்குரியது . பாலாவின் படங்கள் அனைத்தும் சிறந்த திரைப்படம் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.அவர் திரைப்படங்கள் முன்வைக்கும் ஒற்றுமைகள் பாலா தனக்கான முத்திரையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.அவர் மீதான பிம்பத்தில் இருந்து அடுத்த படைப்பில் மீண்டு வருவார் என்று பலரைப் போல் நானும் நம்புகிறேன்.

1 comments

தமிழ்நாடு இசை சுடுகாடா?

இந்தப் பதிவு கொஞ்சம் பழையது, facebook  தளத்தில் எழுதப்பட்டு நண்பர்களுடன் விவாதிக்கப்பட்டது.தாமதமாக பதிவிடுவதற்கு நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.
----------------------------------------------------------------------------
எழுத்தாளர் சாரு தனது கட்டுரையில் பிப்லி லைவ் திரைபடத்தை பற்றிய அவரது பார்வையை பதிவு செய்து இருக்கிறார். சில பல கருத்துகளில் உடன்பாடு இருந்தாலும் அவரது வழமையான  "Sweaping statements " மூலம் பல தீர்ப்புகளை அள்ளி வழங்கி இருக்கிறார். சரி, இது அவர் எப்பொழுதும் செய்வது தானே என்றாலும் அவரது அல்லக்கைகள் வரும் நாட்களில் இதை ஒரு வரலாற்று பொக்கிஷமாகப் பாதுகாத்து செய்யப்போகும் அளப்பரைகளை  மனதில் வைத்து சில தரவுகளை தர வேண்டி இருக்கிறது. காலக்கொடுமை தான் .

http://charuonline.com/blog/?p=965

பிப்லி லைவ் எனக்கும் பிடித்திருந்தது.ஆனால் இந்த திரைப்படத்தின் இசை பற்றி மிக அதீதமான கருத்துக்களை முன் வைக்கிறார். "சோலா மாட்டி" மற்றும் இன்னொரு நாட்டுப்புற பாடலும் என்னையும் மிகவும் கவர்ந்த பாடலே. மிக எளிமையான தாளக்கட்டுகளுடன் எந்த வித திணிப்புகளும் இல்லாமல் நேர்மையாக படைக்கப்பட்ட பாடல், ஆனால் அதை ஹிந்தி சினிமாவின் இசைப் புரட்சி என்கிறார். இந்த குறிப்பிட்ட பாடல்களை தவிர மற்ற பாடல்களில் இசை அமைப்பாளரின் நோக்கம் வேறாக இருக்கிறது. சோலா மாட்டி ரீமிக்ஸ்  மற்றும் இரண்டு பாடல்கள் மிகவும் சராசரியான பாடல்கள். இதைக் கூட தனி ஒரு மனிதனின் விருப்பு சார்ந்த அனுமானமாக நிராகரித்து விடலாம். ஆனால் தமிழ் சினிமாவில் இது போன்ற ஒரு நாட்டுப்புற பாடலும் இடம்பெறவே இல்லை என்றும் பருத்தி வீரன் படத்தில் வரும் ஊரோரம்  பாடல் மட்டுமே விதி விலக்கு என்று    சூடம் கொளுத்தி சத்தியம் செய்கிறார். அது உண்மையாக இருக்க முடியுமா என்பது மட்டுமே எனது முக்கிய நோக்கம்.

முதலில் பருத்தி வீரன் பாடலே தனயன் யுவன் தந்தையிடமிருந்து எடுத்துகொண்டது தான். புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் வரும் திருவிழாக்கூத்து பாடலைக் கேட்பவர்கள்  மிக எளிதாக உணர்ந்து கொள்ளக்கூடியது தான்  . இங்கேயே    சாருவின் வாதம் முடிந்து விடுவதால் நாம் தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடல்களின் தாக்கம் பற்றி அவதானிப்பதை தொடரலாம். கூத்துக்கலை வடிவத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் மிக சிறந்த பாடல்களை இசை அமைப்பாளர்கள் கொடுத்து இருக்கிறார்கள்.  இந்த திருவிழாக்கூத்து பாடல் நாட்டார் கலையின் வாழ்வியலை, சாரு கேலி பேசும் பாரதிராஜா திரைப்படங்களில்  எந்த வித இசை சமரசங்களும் இல்லாமல் மிக இயல்பாக உருவாக்கி  இருப்பார் இளையராஜா, இடையில் வரும் ஆபாச உரையாடல்கள் உட்பட. தென்றல் திரைப்படத்தில் வித்யாசாகர் இசை அமைத்த "புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே" ஒரு மிக சிறந்த உதாரணம். இந்த பாடல் இசையினூடாக  பறை வாசிப்பவர்களைப் பற்றிய குறிப்புகளை கொடுப்பதுடன் அவர்களுக்கான அரசியலைப் பற்றியும் பேசுகிறது.

கதை சொல்லிகள் தமிழகத்தின்  நாட்டார் கலைகளின் முக்கிய அங்கமாக விளங்குகிறார்கள். இதே கூத்துக் கலையின் வெளிப்பாடாக விருமாண்டி படத்தில் "கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில் " பாடலானது வியக்க வைக்கும் தாளக்கட்டுகளுடன் கிராமத்து பாடகர்களின் குரல்களிலேயே வெளிப்படுவது மற்றுமொரு சிறப்பு. இந்த பாடல் முழுவதும் கதை சொல்லிகளின் முறைகளை கையாண்டு இசை அமைத்து இருப்பார் இளையராஜா. ஒருவர் கதை விவரித்துக் கொண்டே வருவதும் மற்றொருவர் ஆமோதிப்பதும் நிராகரிப்பதுமாக பார்வையாளர்களுக்கு பாலமாகவும் விளங்கும் இந்த உக்தி  பாடலிலும் தென்படும். இந்த கதை சொல்லிகளின் பரிமாணத்தை கரிமேடு கருவாயன் திரைப்படத்தின் "கதை கேளு" பாடலில் தன் குரலின் மூலம் அணைத்து உணர்வுகளையும் மிக அழகாகவும் அதே நேரம் நாட்டுப்புற வடிவத்தின் இயல்பையும்  மீறாமல் பாடி இருப்பார்.

16  வயதினிலே திரைப்படத்தின் பாடலானது,

சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு  போன புள்ளே ...., 
சோளம் வெளைஞ்சு காத்து கிடக்கு சோடி கிளி இங்கே இருக்கு,
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி,
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி

மானே என் மல்லிகையே மருத மரிகொழுந்தே
தேனே தினைக்கருதே  திருநாளு தேரழகே
உன்ன நெனைக்கையிலே என்ன மறந்தேனடி
பொன்னே பொன்மயிலே எண்ணம் தவிக்குதடி

மாரியம்மன் கோவிலிலே மாறாம கைப்பிடிக்க
நாளும் ஒன்னு பார்த்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேருமடி
கண்ணே கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி !

என்று முற்றுப்பெறுகிறது. திரை இசையின் இலக்கியத்தை தேடுபவர்கள் இந்தப் பாடலைக் கேட்டால் போதும். எளிய மனிதர்களின் வாழ்வியலை அற்புதமாக சித்தரிக்கும் இந்த பாடல், சோளம் விதைக்கப்பட்ட போது  அரும்பிய இரண்டு உள்ளங்களுக்கு இடையிலான  காதலானது அடர்ந்து செழித்த சோளக்கதிர்களின்  வழியாக தொடர்ந்து அவர்களின் சிறு தெய்வ நம்பிக்கையின் ஊடாகப் பதிவு செய்கிறது.இடையிடையே வரும் கோரஸ் குரல்களானது வயல் வெளிகளில் களைப்பு தெரியாமல் உழைப்பவர்கள் பாடும் பாடல் வகை என்பதையும்  கவனிக்க வேண்டும். 

இதே போன்றதொரு பாடல் முதல் மரியாதையில்,

எ கிளி இருக்கு பழமிருக்கு 
ஏரிக்கரை இருக்கு
சோள கருதிறுக்கு
அடி சோல குயிலிருக்கு,
அடி பயிருகுள்ளே பருவப் பொண்ணு பதுங்கி நின்னுகிச்சா ,
அவ பதுங்க கண்டு குருவி ரெண்டு ஒதுங்கி நின்னுகிச்சா
சேலையில் சந்தனம் வேட்டியில்  குங்குமம் தொட்டதும் ஒட்டிகிச்சா
அடி மாலை வரும் முன்ன சோல கிளி ரெண்டும் மத்தளம் கொட்டிகிச்சா  

என்று வரும் இந்தப் பாடலானது கிராமத்துக் கேலியும் புரளியும் கலந்த எந்த வித மிகைப்படுத்தலும் இல்லாத மிக இயல்பாகப் பதிவு செய்யப்பட்ட பாடல்.

இதன் இன்னொரு பரிமாணமாக, வாழ்வியலின் வெவ்வேறு  தளங்களை "Italy live in concert "   மூலம் உலக அரங்கத்திற்கு எடுத்து சென்றிருப்பார் ராஜா. அதில் ஒரு பாடல் கிராமத்தின் கபடி விளையாட்டை வைத்து உருவாக்கப்படிருக்கும். விளையாட்டில் பாடிசெல்பவர் பாடும் அந்த பாடல்,

சக்கு சக்கடி சர்வலக்கடி  
குத்தலக்கடி குமரன்  பொண்டாட்டி 
பாளயத்திலே வாக்கப்பட்ட 
பழனி பொண்டாட்டி பழனி பொண்டாட்டி பழனி பொண்டாட்டி பழனி பொண்டாட்டி பழனி பொண்டாட்டி..............

என்று பாடிசெல்பவர் மூச்சு விடும்போது பாடல் மெல்ல மெல்லக் குறைந்து நிறைவடைவதைக் கேட்டு  அரங்கமே அதிரும்.தெருக்கூத்து கலைக்கு மரியாதை செய்யும் விதமாக "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடலை மலைக்க வைக்கும் தாளக்கட்டுகளுடன் வாசிப்பதைக் கண்டு ரசிகர்களின் கரகோஷம்  அடங்கவே பல நிமிடங்கள் பிடித்ததையும் கேட்க முடியும். இந்த தொகுப்பானது தமிழ்க் கலைகளின் மிகச்சிறந்த ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

கரகாட்டக்காரன் திரைப்படத்தின் பல பாடல்களும் பின்னணி இசைக் கோர்வைகளும் இருந்தாலும் முந்தி முந்தி விநாயகனே என்ற பாடல் கரகாட்டக் கலையின் மதிப்பை வெகுஜனங்களுக்கு உணர்த்திய படைப்பின் உச்ச வெளிப்பாடு. இதே போல இன்ன பிற வடிவங்களான ஒயிலாட்டம்[இசை தேவா] மற்றும் வில்லுப்பாட்டு முறையே அந்த திரைப்படங்களின் வழியே சாத்தியப்படிருகிறது.கலைவாணியோ ராணியோ பாடலில்,  வில்லுடன் இணைக்கப்பட்ட சலங்கைகள் தாளக்கட்டுகளாக இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும் . இது போல பல தரவுகள் நம்மிடையே இருந்தாலும் ஒவ்வொன்றை பற்றியும் விளக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. முத்தாய்ப்பாக, உளியின் ஓசை திரைப்படத்தில், தமிழ் இசைக்கருவிகளின் பெயர்களை வரிசைப்படுத்தி ஒரு உரையாடல் வழியாக  அந்தக் குறிப்பிட்ட இசைக்கருவிகள் ஆங்காங்கே ஒலிக்கச் செய்து நம்மை விவரிக்க இயலாத கற்பனை உலகுக்கு இட்டுசெல்வார் இளையராஜா.

முது நாரை முதுகுருகு 
இசை நுணுக்கம் களரி 
யாவிரை யாழ்நூல் 
பஞ்ச மரபு இவை இசை கூறும்,
செயிற்றியம் கூத்தநூல் 
நடன கலை வகை கூறும்பல 
தொன்நூல்கள் கூறும் தோற்கருவி
உலவு முரசு உடுக்கை மிருதங்க தாள மேளமாகும்,
துளைக்கருவி புல்லாங்குழலோடு   மரக்கிளை ஒடித்து
அமைத்து சீவாளி பொருந்து முக வீணை 
திமிரி நாயணம் நாதஸ்வரமாகும் .
நரம்புக்கருவி மகரை யாழ் சகோடை  யாழ் 
செங்கோட்டி யாழ் ஆயிரம் நரம்புகள் கொண்ட பேரியாழ்
சாரங்கியோடு என்றும் நிறை வீணை ஆகும்
மிடத்துக்  கருவி குரலாகும் ,பண்பட்டு பன் பாடும் குரல் வகையாகும்
இத்தனையும் ஒருங்கிணைந்து குரல் துத்தம் கைக்கிளை
உழை இளி விளரி தாரமென 
ஏழிசை எழும்ப தாளம் தவறாமல் இசைந்தாடும்
நடனக்கலை தனில் எத்தனை பாவமுண்டு 
நடனத்திலே அதை அத்தனையும் அறிந்தவர் யார் உலகத்திலே...

என்பதாகத்  தொடரும் அந்தப் பாடலானது இசைக்கருவிகளின் வரலாற்றின் வழியாக தமிழ் இசை அமைப்பின் சாத்தியங்களைப் பறைசாற்றுகிறது.இது நிச்சயம் தமிழ் கலைகளுக்கு  அளிக்கப்பட மிக உயர்ந்த இடமாகும். 

பிப்லி லைவ் போன்ற திரைப்படம் வந்ததில்லை  என்று அமிதாப் பச்சன் கூறியதாக சாரு பரவசப்படுகிறார். ஆனால் ஹிந்தி சினிமாவில் இது நடைபெறாதது ஒன்றும் அதிசயமல்ல. அவர்களின் நோக்கமெல்லாம் வெளி நாட்டில் வாழும் சில "ஹிந்தியர்களின்" கலாச்சாரமாக ஒட்டு மொத்த இந்தியர்களின் அடையாளத்தைப் போலியாக சித்தரிப்பது மட்டுமே. மாறாக தமிழ் போன்ற  மொழிகள் தங்களது அடையாளங்களை தொடந்து வெளிப்படுத்தி வந்தே இருக்கின்றன.அதன் தொடர்ச்சியாகத் தான் தமிழ் இசைக்கலையின் வெளிப்பாடும் திரைப்படங்களில் சாத்தியமாகி வந்து இருக்கிறது. இதன் மூலம் ,தமிழ்நாடு ஒன்றும் இசை சுடுகாடாக இருந்திருக்கவில்லை. மாறாக பல அற்புதங்களை ஓசை இல்லாமல்  நிகழ்த்திக்  காட்டி இருக்கிறதென சற்றே உரக்கக் கூறுவதில் தயக்கம் ஒன்றும் எனக்கில்லை.  அதை அறியாதவர்கள் அல்லது அறியாது போல் நடிப்பவர்கள் தங்கள் கண்களை தாங்களே மூடிக்கொண்ட பாரிஸ் பூனைகள்.