0

record dance'ம் ராம்லீலா மைதானமும்

Saturday, September 3, 2011

எண்பதுகளின்  இறுதியிலும்  தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் கிராமங்களுக்கு  பிழைப்பு  தேடி  வரும்  பல  விதமான மனிதர்களைக் காண முடிந்தது. அதில் ஒன்று தான் ஊர் ஊராகச் சென்று திரைப்படபாடல்களுக்கு நடனமாடும் கழைக் கூத்தாடிகள். இவர்களது வண்டி கூட ஒரு நடமாடும் சினிமா கம்பெனி. இவர்களது record player மற்றும்  சினிமா நட்சத்திரங்களை  அச்சு அசலாக பிரதிபலிக்கும் உடையலங்காரங்களும் சிகை அலங்காரங்களும் கிராமத்து மனிதர்கள் எல்லோருக்கும் எதோ ஒரு வகை மயக்கத்தை கொடுத்திருக்கிறது. இவர்கள் எந்த கிராமத்திலும் பத்து நாட்களுக்கு மேல் தங்குவதைக் காண  இயலாது. ஆனால் அந்த பத்து நாட்களுக்கு வேண்டிய எல்லா விதமான பொழுது போக்கு அம்சங்களுக்கும் ஒரு template வைத்து இருப்பார்கள்.

 கூடாரம் அமைப்பது தான் இவர்களுடைய முதல் பணி. அதற்கு இவர்கள் சேகரிக்கும் புள்ளி விவரங்கள் மிகவும் சுவாரஸ்யம் மிக்கது.எந்த இடத்தில் கூடாரம் அமைப்பது முதற்கொண்டு எத்தனை பார்வையாளர்களை  இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது வரை ஒரு கச்சிதமான கணக்கை நடத்தியிருப்பார்கள். காலை முதல் மாலை வரை லுங்கியோடும் கை பனியன் சகிதம் கூடாரம் அமைக்கும் தலைவர் மாலையில் ஜிகினாக்கள் மின்னும் மஞ்சள் சட்டை மற்றும் அதே நிறத்தில் கால் சராயும் கருப்பு கண்ணாடியும் அணிந்து, நான் ஆணையிட்டால் என்று ஆரம்பிப்பதே உற்சாகமான துவக்கம் தான். இதில் பாடல்களுக்கு இடையில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் குழந்தைகளைத் தூக்கி கொஞ்சுவது போன்ற  சின்ன சின்ன ஆச்சர்யங்களை பார்வையாளர்களுக்கு அளித்து கரகோசத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.  கிராமங்களில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ரசிகர்கள் ரசனையில் மட்டும் வேறுபடவில்லை. இவர்களது அரசியல் சார்பு நிலைகளும் கூட இந்த இருவரையும் முன் வைத்தே இருப்பதால் எந்த பாடலுக்கு எப்பொழுது நடனமாட வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம்.  ஒரு எம்.ஜி.ஆர் பாடலுக்கு நடனமாடினால் அடுத்தது சிவாஜி ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும். இதே போன்று தான் வளர்ந்து கொண்டிருந்த ரஜினி கமல் ரசிகர்களும்.

இந்த காட்சிகளுக்கு அனுமதிக்கட்டணம் என்பது கட்டாயம். அது தவிர பார்வையாளர்கள் விருப்பப்பட்ட பொழுது அவர்கள் விருப்பப்பட்ட பணத்தை விருப்பப்பட்ட நடிகர் அல்லது நடிகையர் பாடலுக்கு நடனமாடுவோருக்கு  பின்னூசி வைத்து அவர்களது சட்டையில் எல்லோருக்கும் தெரியும் வண்ணம் பொருத்தி விடுவார்கள். அந்த நேரத்தில் அவருக்கென இருக்கும் குழுவினரின் கைத்தட்டலும்,  அவர்களின் முகத்தில் தெரியும் பெருமிதத்தையும்   வார்த்தைகளில் வடிப்பது  கடினம். ஒவ்வொரு பாடல் முடிந்த பின்னாலும் அடுத்த பாடலுக்குத் தேவையான உடையலங்காரம் செய்யும் இடை வேளையில், பணம் கொடுத்தவர்கள் பட்டியல் வாசிக்கப்படும். அதில் ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதும் அறிவிக்கப் படும்.இந்த இடத்தில் பெருசுகளின் ஈகோக்களினால் பல நேரங்களில் கழைக் கூத்தாடிகள் பலன் பெறுவதும் உண்டு. இதில் சில குறிப்பிட்ட பாடல்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து அந்தக் குறிப்பட்ட நடிகருக்கு ஒரு வாசகர் வட்டம் உருவாகி விடும். அவை நேயர் விருப்பத்தால் தினந்தோறும் குறைந்து ஒரு முறையாவது இடம்பெற்று விடும்.

இவர்களது பாடல் தெரிவு செய்யும் விதம், பெரிய பெரிய head phone மாட்டிகொண்டு புருவங்களில் பின்ச் செய்து கொண்ட எந்த டி.ஜே க்களை விடவும் சிறந்தது.எம்.ஜி.ஆருக்கு நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்றால் சிவாஜிக்கு சிக்குமங்கு சிக்கு மங்கு சின்ன பாப்பா. டூயட் பாடலில் கடலோரம் வாங்கிய காற்றுக்கு, மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன பதில் சொல்லி விடும். ரஜினிக்கு வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன் என்றால் கமலுக்கு உன்னால் முடியும் தம்பி.அதுவே டூயட் என்றால் ரஜினிக்கு அடுக்கு மல்லிகையும்  கமலுக்கு நேத்து ராத்திரியும். சிவாஜியின் கொடுத்தவனே  பறித்துக் கொண்டான்டி பாடலில் இரண்டு கண்ணும் இழந்தது போன்று கருப்பு மையை கண்களில் தடவி நடிகர்கள் நடிக்கும் போது  உணர்வு பூர்வமாக கண் கலங்கும் பார்வையாளர்களும் உண்டு.

இந்தக் கழைக்கூத்தாடிகளுடன் நெருக்கமாகி விடும் கலை ஆர்வலர்கள் தாங்களும் ஓரிரு பாடலுக்கு நடனமாடி தங்களின் கலைத் தாகத்தை தீர்த்துக் கொள்வதும் உண்டு.அதில் குறிப்பாக, எம்.ஜி.ஆரின் பால் மிகுந்த அன்பு கொண்டிருந்த ஒருவர்,  கருப்பு கண்ணாடியும் தொப்பியும் முழுக்கை சட்டையும் வேட்டியும் நடை உடை பாவனைகளும் எம்.ஜி.ஆரைப் போலவே தன் அன்றாட வாழ்கையை மாற்றிக் கொண்டவருடைய பங்களிப்பும் குறிப்பிட தக்கது. முதல்வரான பிறகு, நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற பாடலில் முதல்வராகவே தோன்றிய எம்.ஜி.ஆரைப் போலவே இவரும் செய்வதை கூட்டம் நன்றாக ரசிக்கும்.இவரது இறுதி நாளின் கோரிக்கையாக  இவர் இறந்த போது தொப்பியும் கண்ணாடியும் அணிந்தே புதைக்கப்பட்டார். சகலகலா வல்லவன் பாடலுக்கு ரூபாய் நோட்டுக்களை மாய்ந்து மாய்ந்து குத்திய நண்பன் ஒருவன் பின்னாளில் பேருந்து விபத்தில் பலியானதும் நடந்தது.

கிட்டத்தட்ட அந்தக் கிராமத்தின் மக்கள் அனைவரும் பத்து நாட்களுக்குள்  ஒரு முறையேனும் இவர்களது நடனங்களைக் கண்டு களித்திருப்பர். இந்த கழைக் கூத்தாடிகளுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்பட்டு விடுவதும், பத்து நாட்களுக்குப் பிறகு கூடாரத்தை  வேறொரு ஊருக்கு மாற்றி விடுவதும் சகஜமானது.இதில் ராம் லீலா மைதானத்திற்கும் இந்த கூடாரத்திற்கும் என்ன தொடர்பு? கன கச்சிதமாக திட்டம் போட்டு பத்து நாளும் உணர்ச்சி கொந்தளிப்பான காட்சிகளுடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக  இந்த உத்தமர்களின் நாடகம் அரங்கேறி இருந்தாலும்,  எளிமையான நேரடியான நோக்கங்களை முன்வைத்து நடனமாடிய கழைக் கூத்தாடிகள் தான் எல்லா வகையிலும் என் மனதிற்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.