0

சுஹாசினியின் பதேர் பாஞ்சாலி

Thursday, March 17, 2011

திருமதி சுஹாசினி மணிரத்தினம் அவர்கள், விஜய் தொலைக்காட்சியின் இயக்குனர்கள் பங்கேற்ற ஒரு விவாதத்தில் பங்கெடுத்ததை அறிந்திருக்கலாம். அதில் பொதுவான ஒரு கேள்வி, "தமிழ் சினிமா முன்னேற ஒரு படைப்பாளியாக நீங்கள் எதை வலியுறுத்துவீர்கள்?". அதற்கு அம்மையார், நம் கதாநாயகர்களைக் குளித்து விட்டு வரச் சொல்கிறார் முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டே. இவரது கெட்ட காலம் மதுரைத் திரைப்படங்கள் வேறு வரிசை கட்டி நிற்கின்றன. இவரும் இவரது குலக் கொழுந்துகளும் மூக்கைப் பொத்திக் கொண்டு தான் திரை விமர்சனத்தையே நடத்த வேண்டி இருக்கிறதோ?
 
அதே விவாதத்தில் இன்னொரு பொதுவான கேள்வி, "உங்களது கனவுத் திரைப்படம் எப்படி இருக்கும்?". அதி உயர் படைப்பாளி அல்லவா அம்மையார், சத்யஜித்ரே'வின் பதேர் பாஞ்சாலியை சுட்டிக் காட்டுகிறார்.  நகப்பூச்சு முதல் நடந்து தேயும் செருப்பு வரை ஒரே வண்ணத்தில் அலங்கரித்துக் கொண்டு , சமூக சேவை செய்யும் corporate  குணவதிகள், அன்னை தெரசாவை மேற்கோள் காட்டுவதில்லையா?பதேர் பாஞ்சாலியில் வரும் மூதாட்டியைக் குளித்து விட்டுத்தான் ரே நடிக்க அனுமதித்தாரோ என்னவோ.


 என்ன விதமான பாத்திரப் படைப்பு அது? அந்த என்பது வயது மூதாட்டியின் முகம் கொடுக்கும் உணர்வுகள் வாழ்வுச் சிக்கல்களைக் கேள்வியாக நம்முன் நிறுத்த வில்லையா? வேறு போக்கிடம் இல்லாத போது மீண்டும் அப்புவின் வீட்டிற்கு வந்தவளை, அப்புவின் தாய் மீண்டும் அவமதிக்கிறாள் . அதன் மூலம்  இயல்பான கோபமும் சுயமரியாதையும் வெளிப்பட வீட்டை விட்டு வெளியேறி, அருகில் இருந்த காட்டுக்குள் அமர்ந்தபடியே மறித்தும் போகிறாள். குழந்தைகள் உறங்குவதற்கு அந்த மூதாட்டியே முன்னொரு சமயம்  பாடிய பாடல் பின்புலத்தில் ஒலிக்க, எந்த வித சலனங்களும் இல்லாமல் அவள் பிணம் எடுத்து சென்று எரிக்கப்படும். நான் மட்டும் கரையில் நிற்க என்னை விட்டு சென்றவர்கள்  எங்கே என்பது போன்ற அர்த்தம் கொண்ட அந்தப் பாடலின் ஆழம்  எந்த வார்த்தைகளின் துணை கொண்டும் நிரப்பி விட இயலாது, வாழ்கையின் நுட்பமான கணங்கள் காட்சிப் படிமங்களாக, திரை மொழியாக உருவாக்க முடிந்திருக்கிறதே! அதி உயர் படைப்பாளிகளின் பதேர் பாஞ்சாலியை நினைத்து பார்க்கிறேன்.மூதாட்டிகள் பாவம், கருவலயங்களைப்  போக்க வெள்ளரிக் காய்களை வட்டமாக வெட்டி கண்களுக்கு வைத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.


தமிழ் திரைப்படத்தின் மிகச் சமீபத்திய உதாரணம்,  தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் நாயகி ஒரு கூட்டுத் திருட்டு செய்யும் குடும்பத்தை சேர்ந்தவள். அவளுக்கும் நாயகனுக்குமான  ஒரு நெருக்கமான தருணம். நாயகன் அவளது உதட்டில் முத்தமிட நினைத்து நெருங்கும்  வேளை. "நான் களவானி குடும்பத்து பொண்ணு தான் அதுக்காக திருட்டுத்தனமா  என்னை  எடுத்துக்கலாம்னு நினைக்கறியா" என்று எளிமையான நாணம் கலந்த மறுப்புடன் கூறி விட்டு விடை பெறுவாள். இது போன்றதொரு நாகரீகம், சீனு ராமசாமிக்கு சாத்தியப் படுகிறதே! "அதி உயர்" படைப்புக்களில் ஏன் ஒரே ஒரு தருணம் கூட இது போல வாய்ப்பதில்லை? குறைந்த பட்சம்  இவர்கள் வாழும் வாழ்கையைக் கூட நேர்மையாகப் பதிவு செய்ய இயலவில்லையே.  ஏனெனில் இவர்கள் உயர்ந்த பீடத்தில் அமர்ந்து நம்மைக் குளித்து விட்டு வரும்படி  கட்டளை இடுகிறார்கள். இறங்கி வந்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள இவர்கள் ஒரு போதும் முயல்வதில்லை.