0

எழுத்தாளரும் இயக்குனரும்!

Monday, December 27, 2010

இயக்குனர் பாலாவின் நான் கடவுள் மற்றும் பிதாமகன் திரைப்படங்கள் அடுத்தடுத்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு திரைப்படங்களின் மூலம், எழுத்தாளனின் பங்கு ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது காணக் கிடைக்கிறது. பொதுவாக பாலாவின் பாத்திரங்கள் அவர்களுக்குண்டான நியதிகளுக்குட்பட்டு அழுது அரற்றுபவை. அது சரி தவறு என்னும் வாதத்திற்கு சென்று ஒரு படைப்பாளனுக்கு உத்தரவிடுவது என் வேலை அல்ல.அவருடைய எல்லா திரைப்படங்களிலும் இயலாமையை வெளிப்படுத்தும் கதாபாதிரங்களுக்கு இடையே ஒரு மெல்லிய நூல் இழையோடுவது தெரியும்.

இவ்வாறான பாத்திரங்கள் நான் கடவுள் திரைப்படத்தில் கதையின் மைய நோக்கத்திற்கு உட்பட்டு ஒரு தெளிவான கோர்வையான காட்சியமைப்புகளை முன்வைக்கிறது. ஆனால் பிதாமகன் பாத்திரங்களோ கிட்ட தட்ட அனேக முக்கியக் காட்சிகளிலும் எல்லை மீறுகிறது. சிறையில் சித்தன் மீது தாக்குதல் நடத்த ரௌடிகள் மீண்டும் சிறைக்குள் வரும் காட்சிகளும் அதை தொடர்ந்து சக்தி சித்தனை கட்டுப்படுத்த முயல்வதும் காவலர்கள் சக்தியை தவறாக தண்டிப்பதும் வலுவான காட்சியமைப்புகள் இல்லாமல் தொய்வு ஏற்படுத்துகிறது. ஆனால் இயக்குனரின் சக்தியின் மீதான் அனுதாபம் வழிய திணிக்கப்படுகிறது.இது சக்தி இறுதி காட்சியில் கொல்லப்பட்டு சாக்கு மூட்டைக்குள் பிணமான பிறகும் நடைபெறுகிறது. சக்தியின் கோரமான முகத்தைக் கண்ட பிறகு சித்தன் வானத்தை வெறித்துப் பார்பதிலேயே புரிந்து விடும். ஆனால் காட்சிகள் நீடிக்கப்பட்டு சக்தியின் உருவம் இரண்டுமுறை தோன்றி மறைவதும், பலர் சித்தன் மீதான தங்கள் வெறுப்புகளைக் கொட்டுவதும் படு செயற்கையானது.இது ஒன்று அழுத்தமான இசைக்கோர்வைகளைக் கொண்டு சரி செய்யப்படுகிறது அல்லது புஜ பலம் திரண்ட கதாநாயக பிம்பங்களின் எல்லையற்ற வன்முறைகளின் மூலம் பார்வையாளனை அதிர்ச்சிக்குள்ளாக்கி மறக்கடிக்கப் படுகிறது. 

மேலும் சக்தியின் மண்டையோட்டை பார்த்து சித்தன் கதறும் இடமே படம் நிறைவு பெற்று விடுகிறது. ஆனால் தமிழ் சினிமாவின் தார்மிக நியதி ,கொந்தளிப்பான பாடலினூடே பாலாவின் எல்லையையும் சுருக்கி வில்லன் பழிவாங்கப்பட்டு நிறைவடைகிறது. சித்தனின் கதறல் தான் இந்த படைப்பின் உண்மையான தாக்கமாக இருக்க முடியும். சித்தனின் எதிர்பார்ப்பு என்பது அன்பு ஒன்று தான். அது சங்கீதாவின் வீட்டுக்கு சித்தன் முதல் முறை வரும்போது கோழி தன் குஞ்சுகளுடன் இறை பொறுக்குவதும் அதற்கான பின்னணி இசை "யாரது யாரது " பாடலின் முன்னோட்டமாக இசைப்பதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம், 

ஒரு வெட்டியானாக அவனுக்கு சக்தியின் மண்டையோடு கொடுக்கும் கதறல் தான் சித்தனின் தூய்மையான அன்பு. அருமையான கதை மாந்தர்களை உருவாக்கத் தெரிந்த பாலா எழுத்தாளனாக அதே கதாபாத்திரங்களின் உணர்சிகளை தேவைகேற்ப கட்டுப்படுத்தவில்லை . சித்தனின் இறுதி காட்சிகளின் உறுமலும், வில்லனை கிடத்திவிட்டு தவிப்பதும், தேவையற்ற பல சண்டை காட்சிகளும் சித்தன் உள்வாங்கிக் கொண்ட எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான அன்பை பார்வையாளனுக்குள் செலுத்தவில்லை மாறாக திணிக்கப்பட்ட வன்முறைகளின் தாக்கமே எஞ்சி நிற்கிறது.

நான் கடவுளும் கூட புஜ பலம் திரண்ட கதாநாயகனின் வன்முறை இருக்கிறது. அந்த வன்முறை கதைகுட்பட்டு அழகாக கட்டுப்படுத்தப்படுகிறது. பிச்சை எடுக்கும் சிறுவர்கள் கட்டாயமாக பிரித்துக் கொண்டு செல்லும்போது அவர்களின் மீதான பார்வையாளனின் பரிதாபத்தை நேர்மையாக எடுத்துரைக்கிறது. அம்சவல்லி ருத்ரனிடம் உதவியைக் கோரும்போது நம்மையும் சேர்த்து மன்றாடக் கோருகிறது.

பாலா பிதாமகனில் ஒரு எழுத்தாளனின் வெற்றிடத்தை உணர்த்து கொண்டதாகத்தான் தோன்றுகிறது.நான் கடவுள் திரைப்படத்தின் ஆன்மிகம் வரம் மரணம் போன்றவை மீதான பல விமர்சங்களை முன்வைக்க முடியும் என்றாலும் ஒரு படைப்பாளியாக கதைக்கு உண்மையாக எழுத்தாளனின் பங்களிப்பையும் உறுதி செய்திருப்பது போற்றுதலுக்குரியது . பாலாவின் படங்கள் அனைத்தும் சிறந்த திரைப்படம் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.அவர் திரைப்படங்கள் முன்வைக்கும் ஒற்றுமைகள் பாலா தனக்கான முத்திரையை மாற்றிக்கொள்ள விரும்பவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.அவர் மீதான பிம்பத்தில் இருந்து அடுத்த படைப்பில் மீண்டு வருவார் என்று பலரைப் போல் நானும் நம்புகிறேன்.

0 Responses to "எழுத்தாளரும் இயக்குனரும்!"